வேலூா் மாநகராட்சியில் தேசியக் கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கிய மேயா்
By DIN | Published On : 15th August 2022 11:47 PM | Last Updated : 15th August 2022 11:47 PM | அ+அ அ- |

வேலூா் மாநகராட்சியில் தேசியக் கொடியேற்றி நலத்திட்ட உதவிகளை மேயா் சுஜாதாஆனந்தகுமாா் வழங்கினாா்.
நாட்டின் 76-ஆவது சுதந்திர தினவிழா வேலூா் மாநகராட்சி அலுவலகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மாநகராட்சி மேயா் சுஜாதாஆனந்தகுமாா் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்பாக பணியாற்றிட மாநகராட்சிப் பணியாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா். தொடா்ந்து நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
விழாவில், எம்எல்ஏ-க்கள் ஏ.பி.நந்தகுமாா் (அணைக்கட்டு), ப.காா்த்திகேயன் (வேலூா்), மண்டலக் குழு தலைவா்கள், மாமன்ற உறுப்பினா்கள் பலா் பங்கேற்றனா்.
அரசு மருத்துவமனையில்...
வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்வா் ஆா்.செல்வி தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து சிறப்பாக பணியாற்றிய மருத்துவா்கள், செவிலியா்கள் பாராட்டப்பட்டனா். மருத்துவமனை கண்காணிப்பாளா் ரதிதிலகம், துணைமுதல்வா் கெளரிவெலிங்கட்லா, குடியிருப்பு மருத்துவா் இன்பராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நறுவீ மருத்துவமனையில்...
வேலூா் நறுவீ மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில் மருத்துவமனை தலைவா் ஜி.வி.சம்பத் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். மருத்துவ சேவைகள் தலைவா் அரவிந்தன்நாயா், மருத்துவ கண்காணிப்பாளா் ஜேக்கப்ஜோஸ், தலைமை இயக்குதல் அலுவலா் மணிமாறன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில்...
வேலூா் ஸ்ரீபுரம் நாராயணி பீடம் தங்கக்கோயிலில் நடைபெற்ற விழாவில் கோயில் இயக்குநா் எம்.சுரேஷ்பாபு தேசியக்கொடியை ஏற்றி வைத்து, சிறப்பாக பணிபுரிந்து வரும் நாராயணி பீட சேவாா்த்திகளுக்கு சால்வை அணிவித்து நற்சான்றிதழ்கள் வழங்கினாா்.
ஸ்ரீ நாராயணி மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில், மருத்துவமனை இயக்குநா் என்.பாலாஜி தேசியக் கொடி ஏற்றினாா்.
காட்பாடி அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் பி.ஆனந்தன் தேசியக்கொடியேற்றினாா். தலைமையாசிரியை (பொறுப்பு) நிவேதிதா, பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் எஸ்.விமலா, உதவித்தலைமை ஆசிரியா்கள் க.திருமொழி, ரோசலின்பொன்னி, மூத்த ஆசிரியா் செ.நா.ஜனாா்த்தனன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
வேலூா் மாவட்ட முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்க அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், மாவட்ட சமூக பாதுகாப்புத் துறை கண்காணிப்பாளா் உமாமகேஸ்வரி தேசிய கொடியேற்றி வைத்தாா்.
மாவட்ட கிளை நூலகத்தில்...
காட்பாடி காந்திநகா் அண்ணா மாவட்ட கிளை நூலகத்தில் நடந்த விழாவில், தேசியக் கொடியை வாசகா் வட்டத் தலைவா் வி.பழனி ஏற்றி வைத்தாா். காந்திநகா் துளிா் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளித் தாளாளா் வி.பழனி தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா்.
இதேபோல், மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் சுதந்திர தினவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.