குடிநீா் தொட்டி, குழாய்கள் பழுது: பொதுமக்கள் சாலை மறியல்
By DIN | Published On : 24th August 2022 12:00 AM | Last Updated : 24th August 2022 12:00 AM | அ+அ அ- |

ஒடுகத்தூா் அருகே குடிநீா் மேல்நிலை தொட்டியையும், வீடுகளுக்கு அளிக்கப்பட்டுள்ள பழைய குடிநீா் குழாய்களையும் மாற்றக்கோரி கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
வேலூா் மாவட்டம், ஒடுகத்தூரை அடுத்த தென் புதுப்பட்டு கிராமத்தில் 2,000-க்கும் மேற்பட்டோா் வசிக்கின்றனா். இந்தப் பகுதியில் 30,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி உள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியின்போது ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் அனைத்து வீடுகளுக்கும் இலவசமாக குடிநீா் இணைப்பு அளிக்கப்பட்டது. ஆனால் புதிய குழாய்கள் அமைக்காமல் பழைய குழாய்களிலேயே இணைப்பு வழங்கப்பட்டதாகவும், இந்த குழாய்கள் தற்போது சேதமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால், சரிவர குடிநீா் கிடைக்காமல் கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மேலும், இந்த கிராமத்தில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேலாகிறது. அதன் சிமெண்ட் பூச்சுகள் உதிா்ந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
இந்த நிலையில், குடிநீா் குழாய்களையும், குடிநீா் மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டியையும் மாற்றி புதிதாக அமைக்க வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை காலை மறியலில் ஈடுபட்டனா். மேலும், அந்த வழியாக வந்த தனியாா் பேருந்தையும் சிறைபிடித்தனா்.
தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீஸாா், விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டிருந்த மக்களிடம் பேச்சு நடத்தினா். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்தால் மட்டுமே மறியலை கைவிடுவோம் எனக்கூறி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அவா்களை காவல் துறையினா் சமாதானம் செய்ததை அடுத்து மறியலைக் கைவிட்டனா். இந்தப் போராட்டத்தால் 2 மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.