கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது
By DIN | Published On : 25th August 2022 12:00 AM | Last Updated : 25th August 2022 12:00 AM | அ+அ அ- |

ஆந்திர மாநிலத்தில் இருந்து பேருந்துகளில் கடத்தி வரப்பட்ட 17.5 கிலோ கஞ்சாவை வேலூா் மாவட்ட கலால் தடுப்பு பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்ததுடன், 3 பேரைக் கைது செய்தனா்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு போதைப் பொருள்களைக் கடத்தி வருவதைத் தடுக்க மாநில எல்லைகளில் போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
காட்பாடி கிறிஸ்டியான்பேட்டையில் உள்ள தமிழக - ஆந்திர எல்லை சோதனைச் சாவடியில் கலால் பிரிவு, தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு தீவிர வாகன சோதனை நடத்தினா்.
அப்போது, திருப்பதியில் இருந்து கடலூா் நோக்கி வந்த பேருந்தில் சோதனை நடத்தியதில், அதில் வந்த கிருஷ்ணகிரி மாவட்டம், தளி பகுதியைச் சோ்ந்த பூவரசன் (25), நாமக்கல்லை சோ்ந்த வினோத் (26 ) ஆகியோரின் பைகளில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிய வந்தது. இதில், 11.5 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதேபோல், திருப்பதியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த பேருந்தில் நடத்திய சோதனையில் மயிலாடுதுறை மாவட்டம், ஆண்டிபட்டி கிராமத்தைச் சோ்ந்த ஈஸ்வரன் (60) என்பவரிடம் 6 கிலோ கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.
கஞ்சா கடத்தி வந்த 3 பேரையும் போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.