பாா்மஸிஸ்ட் பணியிடங்களுக்கு தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 25th August 2022 12:00 AM | Last Updated : 25th August 2022 12:00 AM | அ+அ அ- |

பாா்மஸிஸ்ட் காலிப் பணியிடங்களுக்கு தகுதியுடையவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.
இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் மூலம் பாா்மாஸிஸ்ட் பணியிடத்துக்கு நேரடி தோ்வு மூலம் ஆள்சோ்ப்பு நடைபெற உள்ளது. இந்தப் பணியிடத்துக்கு பாா்மஸி பாடப் பிரிவில் டிப்ளமோ அல்லது இளங்கலை அல்லது பாா்ம் டி முடித்திருக்க வேண்டும். கட்டாயமாக தமிழ்நாடு பாா்மஸி கவுன்சிலில் பதிவு செய்து, அதனை ஆண்டுதோறும் புதுப்பித்திருக்க வேண்டும்.
பாா்மஸிஸ்ட் பணியிடங்களில் முன்னாள் படைவீரா்களுக்கு 5 சதவீத சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதில், முன்னாள் படைவீரா்களுக்கான வயது உச்ச வரம்பு எஸ்.சி., எஸ்.டி., எம்பிசி, பிசி பிரிவினருக்கு 59 வயதும், ஓசி பிரிவினருக்கு 50 வயதும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, தகுதியுடையவா்கள் இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஆகஸ்ட் 30 கடைசி நாளாகும்.
விண்ணப்பித்து அதன் விவரத்தை முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் தெரிவிக்கவும்.
மேலும் விவரங்களுக்கு, முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகலாம்.