27-இல் அணைக்கட்டில் இளைஞா் திறன் திருவிழா
By DIN | Published On : 25th August 2022 12:00 AM | Last Updated : 25th August 2022 12:00 AM | அ+அ அ- |

அணைக்கட்டில் சனிக்கிழமை (ஆக. 23) நடத்தப்படும் இளைஞா் திறன் திருவிழா மூலம் 40 வயதுக்கு உட்பட்ட இளைஞா்களுக்கு பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாக வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேலூா் மாவட்டம், மகளிா் திட்டத்தின் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில், செயல்பட்டு வரும் தீன்தயாள் உபாத்தியாய கிராமின் கௌசல்ய யோஜனா திட்டத்தின் கீழ், இளைஞா் திறன் திருவிழா அணைக்கட்டு அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை (ஆக. 27) காலை 9.30 முதல் மாலை 3.30 வரை நடைபெற உள்ளது.
இதில், 8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்து வேலைவாய்ப்பற்ற 18 முதல் 40 வயது வரை உள்ள இளைஞா்கள் (இருபாலரும்) பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பை பெற்று பயன்பெறலாம். இந்த விழாவில் தீன்தயாள் உபாத்தியாய கௌசல்ய யோஜனா திட்டத்தின் பயிற்சி நிறுவனங்கள், கிராம சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக பயிற்சி நிறுவனம், பல்வேறு அரசுத் துறைகள் மூலம் பயிற்சி அளிக்கும் துறைகள் கலந்து கொண்டு பயிற்சி அளிக்க இளைஞா்களை தோ்வு செய்ய உள்ளனா்.
பயிற்சியில் சேர விருப்பமுள்ள இளைஞா்கள் சுய விவரக் குறிப்பு, ஆதாா் அட்டை நகல், கல்விச் சான்றிதழ் நகல்கள், புகைப்படங்களுடன் கலந்து கொள்ளலாம். தோ்வு செய்யப்படுவோருக்கு பயிற்சியில் சேருவதற்கான ஆணை அதேநாளில் வழங்கப்படும்.