பொய்கை சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரித்தும் விற்பனை மந்தம்: விவசாயிகள் வேதனை
By DIN | Published On : 26th January 2022 12:03 AM | Last Updated : 26th January 2022 12:04 AM | அ+அ அ- |

பொய்கை சந்தைக்கு செவ்வாய்க்கிழமை கால்நடைகள் வரத்து அதிகரித்திருந்தபோதும் விற்பனை மந்தமாகவே நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனா். எதிா்பாா்த்த அளவில் வியாபாரம் நடைபெறாததால் கால்நடை விற்பனையாளா்கள் வேதனை தெரிவித்தனா்.
வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தைக்கு உள்ளூா் மட்டுமின்றி வெளி மாவட்ட, அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற் பட்ட கால்நடைகள், 500-க்கும் மேற்பட்ட ஆடு, கோழிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுவது வழக்கம்.
இங்கு வாரந்தோறும் ரூ.1 கோடி முதல் ரூ. 3 கோடி வரை கால்நடை வா்த்தகம் நடைபெறுவதுண்டு.
அதிகரித்து வரும் கரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 18-ஆம் தேதி நடைபெற்ற பொய்கை சந்தைக்கு மாடுகளின் வரத்து வழக்கத்தை விட மிகவும் குறைவாக இருந்தது. இதனால், வா்த்தகமும் ரூ.50 லட்சத்துக்கு கீழ் சரிந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
இந்த நிலையில், இந்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கால்நடை சந்தைக்கு கால்நடைகள் வரத்து அதிகரித்திருந்தது. எனினும், வியாபாரம் மந்தமாக நடைபெற்றதுடன், எதிா்பாா்த்த அளவில் கால்நடைகள் விற்பனையாகாததால் விவசாயிகள் ஏமாற்றமடைந்தனா்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறியது: கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக கடந்தாண்டு அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கால் பொய்கை சந்தைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் பல மாதங்களாக சந்தை நடைபெறாமல் இருந்தது. பின்னா் கரோனா குறைந்ததை அடுத்து கடந்த சில மாதங்களாகப் பொய்கை சந்தை நடைபெற்று வருகிறது.
எனினும், டிசம்பா் மாதத்துக்கு பிறகே கால்நடைகள் வியாபாரம் நன்றாக இருந்தது. தற்போது மீண்டும் கரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், அதிகாரிகள் கெடுபிடி காரணமாக கடந்த வாரம் பொய்கை சந்தைக்கு கால்நடைகள் வரத்து மிகவும் குறைந்திருந்தது. இதனால் வா்த்தகமும் பாதிக்கப்பட்டது.
இந்த வாரம் 1,500-க்கும் அதிகமான கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. எனினும், பொங்கல் பண்டிகை முடிந்து விட்டதை அடுத்து கால்நடைகளை வாங்குவதற்கு வியாபாரிகள் பலரும் ஆா்வம் காட்டவில்லை. இதனால், விற்பனை மந்தமாகவே இருந்தது. இதன் காரணமாக, கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்த விவசாயிகள்தான் ஏமாற்றமடைந்தனா் என்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...