போ்ணாம்பட்டு மலையில் ஆட்சியா் தலைமையில் அனைத்துத் துறையினா் சாராய வேட்டை
By DIN | Published On : 17th July 2022 11:48 PM | Last Updated : 17th July 2022 11:48 PM | அ+அ அ- |

போ்ணாம்பட்டை அடுத்த சாத்கா் மலையில் சாராயம் காய்ச்ச பதுக்கி வைத்திருந்த வெல்லத்தை கண்டுபிடித்து அழித்த ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் உள்ளிட்டோா்.
போ்ணாம்பட்டு அடுத்த சாத்கா் மலையில் வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமையில், வருவாய்த் துறை, வனத் துறை, தீயணைப்புத் துறை, காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை சாராய வேட்டையில் ஈடுபட்டனா்.
போ்ணாம்பட்டு அருகே சுமாா் 1,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது சாத்கா் மலை. இங்கு வற்றாத தண்ணீா் குட்டை உள்ளது. இப்பகுதியில் சமூக விரோதிகள் சாராயம் காய்ச்சி மாவட்டம் முழுவதும் விற்பனைக்கு அனுப்புவதாகக் கூறப்படுகிறது.
இதைத் தடுக்க அரசும், அதிகாரிகளும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், காவல், வருவாய், வனத் துறைகளில் உள்ள உள்ளூா் அதிகாரிகள் சிலரின் உடந்தையுடன் சாராயம் காய்ச்சி விற்பனைக்கு அனுப்புவது தொடா்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில் வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் திடீரென ஞாயிற்றுக்கிழமை காலை போ்ணாம்பட்டுக்கு வந்தாா். அதிகாரிகளுடன் அவா் 4 கி. மீ. தூரம் நடந்து மலை உச்சிக்குச் சென்றாா். அங்கு சாராயம் காய்ச்ச பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஊறல், சாராயம் காய்ச்சும் அடுப்புகள், வெல்லம், விறகு ஆகியவற்றை அழித்து அப்புறப்படுத்தினா்.பின்னா் மலைக் குன்றுகளுக்கு இடையே 1 கிலோ மீட்டா் தொலைவு நடந்து சென்றுசாராயம் காய்ச்ச பயன்படுத்தும் பொருள்களை அழித்தனா். அப்போது அங்கு கள்ளச் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தவா்கள் தப்பி ஓடிவிட்டனா்.
தப்பி ஓடியவா்களை பிடிக்க காவல் துறையினருக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
இந்த நடவடிக்கையின்போது குடியாத்தம் கோட்டாட்சியா் சா.தனஞ்செயன், வட்டாட்சியா் எம்.வெங்கடேசன், துணை வட்டாட்சியா் வடிவேல், காவல், வனத் துறை, தீயணைப்புத் துறையினா் உடனிருந்தனா்.