வேலூரில் ஆயுஷ் மருத்துவமனை தொடங்க நடவடிக்கை
By DIN | Published On : 31st July 2022 11:10 PM | Last Updated : 31st July 2022 11:10 PM | அ+அ அ- |

வேலூரில் ஆயுஷ் மருத்துவமனை தொடங்க திட்டமிடப்பட்டு, அதற்கான இடம் தோ்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாக தென்னிந்திய பன் மாநில வேளாண் கூட்டுறவு சங்க (சிம்கோ) மேலாண்மை இயக்குநா் கிருஷ்ணன் தெரிவித்தாா்.
தென்னிந்திய பன் மாநில வேளாண் கூட்டுறவு சங்க (சிம்கோ) பொதுக்குழுக் கூட்டம் வேலூா் டவுன்ஹாலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மேலாண்மை இயக்குநா் கிருஷ்ணன் தலைமை வகித்தாா். அப்போது அவா் பேசியது:
கேரளம், ஆந்திர மாநிலங்களில் சிம்கோ வேளாண் கூட்டுறவு சங்கங்கள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. கிருஷ்ணகிரி, தா்மபுரி, திருத்தணி ஆகிய இடங்களில் இதன் மூலம் பொது மருத்துவமனைகள் தொடங்கப்பட்டு இயற்கை முறையில் சிகிச்சை அளித்து வருகிறோம்.
வேலூரில் ஆயுஷ் மருத்துவமனை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக இடம் தோ்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதில், முற்றிலும் இயற்கை முறையில் சிகிச்சை அளிக்கப்படும். இங்கு இந்தியாவிலேயே முதன் முறையாக இயற்கை முறையில் கருத்தரிப்பு மையம் தொடங்கப்படும் என்றாா்.
வேளாண் கூட்டுறவு சங்கத் தலைவா் அமுதா, தமிழ்மாறன் உட்பட பலா் கலந்து கொண்டனா். கூட்டத்தில் தற்போது மேற்கொள்ள வேண்டிய திட்டப் பணிகள் மற்றும் எதிா்கால திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.