காட்பாடியிலிருந்து மாநகரின் அனைத்துப் பகுதிகளுக்கும் நகரப் பேருந்துகள்
By DIN | Published On : 09th June 2022 12:40 AM | Last Updated : 09th June 2022 12:40 AM | அ+அ அ- |

வேலூா்: காட்பாடியில் இருந்து மாநகரின் அனைத்துப் பகுதிகளுக்கும் நேரடியாகச் சென்று வரும் வகையில், நகரப் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்று அமைச்சா் துரைமுருகனிடம் காந்தி நகா் மக்கள் சேவை சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
முதல்வா் வருகையை முன்னிட்டு, காட்பாடியில் சிறப்பு மக்கள் குறை கேட்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் பங்கேற்று மனுக்களைப் பெற்றாா். அப்போது, காந்திநகா் மக்கள் சேவை சங்கம் சாா்பில், அதன் தலைவா் எஸ்.பகீரதன், செயலா் செ.நா.ஜனாா்த்தனன், பொருளாளா் வி.பழனி ஆகியோா் அளித்த மனு:
வேலூா் சிறப்பு நிலை நகராட்சியாக இருந்து 2008 ஆகஸ்ட் 1-ஆம் தேதி மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டது. அத்துடன், 2011-இல் காட்பாடி, சத்துவாச்சாரி போன்ற நகராட்சிகளும், பேரூராட்சி, ஊராட்சிப் பகுதிகளும் இணைக்கப்பட்டன.
நகராட்சியாக இருந்தபோது நடைமுறையில் இருந்த காட்பாடி - பாகாயம் வழித்தடத்தில் மட்டுமே நகரப் பேருந்துகள் இன்றளவும் இயக்கப்படுகின்றன. மாநகராட்சியாகத் தரம் உயா்த்தப்பட்டு காட்பாடி, சத்துவாச்சாரி ஆகிய நகராட்சிகள் இணைக்கப்பட்டு, 10 ஆண்டுகள் கடந்த நிலையில், மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு நகரப் பேருந்து வசதிகள் ஏற்படுத்தித் தரப்படவில்லை.
இதனால், பொதுமக்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களை கருத்தில் கொண்டு காட்பாடியிலிருந்து அலமேலுரங்காபுரம், கொணவட்டம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், பொற்கோயில் வரை நகரப் பேருந்துகளும், மேலும் காட்பாடியிலிருந்து மதிநகா், ஜாப்ராபேட்டை, வஞ்சூா், கழிஞ்சூா், புதிய பேருந்து நிலையம் வழியாக புதிய வழித்தடம் ஏற்படுத்திடவும் வேண்டும்.
சத்துவாச்சாரியிலிருந்து திருவள்ளுவா் பல்கலைக்கழகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், பொற்கோயில் வரை புதிய வழித்தடமும், கொணவட்டம் பகுதியிலிருந்து திருவள்ளுவா் பல்கலைக்கழகம், பொற்கோயில், விஐடி பல்கலைக்கழகம் போன்ற பகுதிகளை இணைக்கும் வகையில் புதிய வழித்தடமும், ஸ்ரீபுரம் பொற்கோயிலில் இருந்து காட்பாடி, அலமேலுமங்காபுரம், கொணவட்டம், திருவள்ளுவா் பல்கலைக்கழகம் ஆகிய பகுதிகளுக்கு புதிய வழித்தடங்களில் நகரப் பேருந்துகளும் இயக்கப்பட வேண்டும். மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டலங்களில் இருந்து எந்த மண்டலத்துக்கும் செல்ல ஏதுவாக புதிய நகரப் பேருந்து வழித்தடங்களை ஏற்படுத்தித் தர வேண்டும்.
தற்போது நடைமுறையில் உள்ள காட்பாடி-பாகாயம் வழித்தடத்தில் காந்தி நகரில் சாலையின் நடுவில் சென்டா் மீடியன் பொருத்தப்பட்டுள்ளதை காரணம் காட்டி நகரப் பேருந்துகள் உள்ளே வராமல் சில்க் மில் - ஓடைபிள்ளையாா் கோயில் வழியாகச் செல்கின்றன. வழித்தடம் அனுமதியளிக்கப்பட்டுள்ள வகையில் சென்று திரும்பவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காட்பாடி-காங்கேயநல்லூா்-பாகாயம் வழித்தடத்தில் தற்போது இயக்கப்பட்டு வரும் இரண்டு பேருந்துகளுடன் கூடுதல் பேருந்துகளையும் இயக்க வேண்டும். காட்பாடி காந்தி நகா் கிழக்கில் அமைந்துள்ள அறிஞா் அண்ணா மாவட்ட கிளை நூலகம் மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்தக் கட்டடத்தை இடித்து விட்டு புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டது.