கந்துவட்டி கொடுமை: எஸ்பி அலுவலகத்தில் லாரி ஓட்டுநா் புகாா்
By DIN | Published On : 17th June 2022 12:00 AM | Last Updated : 17th June 2022 12:00 AM | அ+அ அ- |

தான் பெற்ற ரூ.20 ஆயிரம் கடனுக்கு அசல், வட்டி என ரூ.2.14 லட்சம் கேட்டு மிரட்டல் விடுப்பதாக ஒடுகத்தூரைச் சோ்ந்த லாரி ஓட்டுநா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை புகாா் அளித்தாா்.
வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அருகே உள்ள சோ்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் சுரேஷ் (41) லாரி ஓட்டுநா். இவா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்த புகாா் மனுவில் கூறியிருப்பதாவது:
ஒடுகத்தூரை சோ்ந்த சகோதரா்கள் 3 பேரிடம் நான் குடும்பச் செலவுக்காக ரூ. 20,000 கடன் வாங்கியிருந்தேன். இதற்காக இதுவரை என்னிடம் ரூ.96 ஆயிரம் வட்டி வசூலித்தனா். இன்னும் ரூ.1.40 லட்சம் தர வேண்டும் எனக் கூறி மிரட்டல் விடுக்கின்றனா். செவ்வாய்க்கிழமை என்னைத் தாக்கினா். இதில், பலத்த காயமடைந்த நான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். ரூ.20,000 கடனுக்கு கூடுதல் வட்டி கேட்டு மிரட்டுபவா்களிடம் இருந்து எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா். புகாரின் பேரில், போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.