வேலூரில் ஆட்சியர் பெயரில் டிஆர்ஓ-க்கு போலி கட்செவி அஞ்சல்!
By DIN | Published On : 22nd June 2022 05:35 PM | Last Updated : 22nd June 2022 05:35 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
வேலூர்: வேலூர் மாவட்ட ஆட்சியர் பெயரில் மாவட்ட வருவாய் அலுவலருக்கு புதன்கிழமை அனுப்பப்பட்ட போலி கட்செவி அஞ்சலில் முக்கிய நபர்களுக்கு வழங்கிட ரூ.1 லட்சம் மதிப்புடைய பரிசு சீட்டுகளை வாங்கிட அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அளித்த புகாரின்பேரில், இந்த போலி கட்செவி அஞ்சல் தகவல் அனுப்பியவர்கள் குறித்து சைபர் கிரைம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் புகைப்படத்துடன் 7207912008 என்ற எண்ணிலிருந்து மாவட்ட வருவாய் அலுவலர் கே.ராமமூர்த்தியின் கைப்பேசி எண்ணுக்கு புதன்கிழமை காலை கட்செவி அஞ்சலில் தகவல் வரப்பெற்றுள்ளது.
முதலில் சாதாரண நலன் விசாரிப்புடன் தொடங்கிய அந்த தகவலில் பின்னர், முக்கிய நபர்களுக்கு வழங்கிட ரூ.10 ஆயிரம் மதிப்புடைய அமேசான் பரிசு சீட்டுகள் தேவைப்படுவதாகவும், தற்போதைய நிலையில் அந்த பரிசு சீட்டுகளை வாங்க என்னிடம் வங்கி அட்டைகள் இல்லை, ஆதலால் தங்கள் வங்கி அட்டையை பயன்படுத்தி அந்த பரிசு சீட்டுகளை வாங்கி வைக்க வேண்டும் என்றும், மாலைக்குள் அதற்குரிய தொகையை அளிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து மற்றொரு எண்ணிலிருந்து (8299509794) தகவல் அனுப்பிய அதே நபர், இந்த எண்ணுக்கு கூகுள் பே மூலம் பணத்தை செலுத்தி பரிசு சீட்டுகள் வாங்கி வைக்கவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்த மாவட்ட வருவாய் அலுவலர், இந்த தகவல்களை சைபர் கிரைம் பிரிவுக்கு அனுப்பி விசாரித்ததில் ஆந்திர மாநிலம், ராஜமுந்திரி பகுதியிலிருந்து வேலூர் மாவட்ட ஆட்சியர் பெயரில் போலியாக கட்செவி அஞ்சல் அனுப்பப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, இந்த போலி கட்செவி அஞ்சல் விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன் மாவட்ட சைபர் பிரிவுக்கு புகார் அளித்தார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்மைக்காலமாக வேலூர் மாவட்ட அரசு அதிகாரிகள், அலுவலர்கள் பெயரில் கட்செவி அஞ்சல், முகநூலில் பணம் அனுப்பவும், பரிசு சீட்டுகள் வாங்கவும் வலியுறுத்தி போலியான தகவல்கள் வரப்பெறுகின்றன. அதன்படி, ஏற்கனவே மாவட்ட ஆட்சியர், கல்லூரி கல்வி மண்டல இணை இயக்குநர், ஆட்சியர் அலுவலக பொதுமேலாளர் ஆகியோரது பெயர்களில் பணம் கேட்டு முகநூலில் போலியாக தகவல்கள் அனுப்பப்பட்டது தொடர்பாக சைபர் கிரைமில் புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தற்போது பரிசு சீட்டுகள் கேட்டு மாவட்ட ஆட்சியர் பெயரில் மாவட்ட வருவாய் அலுவலருக்கு போலியான கட்செவி அஞ்சல் தகவல் வரப்பெற்றிருப்பது வேலூர் மாவட்ட அரசுத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...