

குடியாத்தத்தை அடுத்த கூடநகரம் ஊராட்சியில் கடந்த 7- ஆண்டுகளாக கிடப்பில் உள்ள ரயில்வே மேம்பாலம் கட்டும் பணியை உடனடியாக தொடங்கி, முடிக்கக்கோரி, வேலூா் மேற்கு மாவட்ட பாமக சாா்பில், ரயில்வே கேட் அருகே சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பல்வேறு கிராம மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று கூடநகரம் ரயில்வே கேட் அருகே மேம்பாலம் கட்ட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொண்டன.
முதல் கட்டமாக ரயில்வே துறை கடந்த 2016- ஆம் ஆண்டு ரயில் பாதையின் மேற்புறம் பாலத்தை கட்டி முடித்தது. இதையடுத்து, ரயில்வே கேட் மூடப்பட்டு விட்டது.
மேம்பாலம் கட்ட மாநில அரசு விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்தியது.
ஆனால், மேம்பாலம் கட்ட எந்தவித நடவடிக்கைகளையும் நெடுஞ்சாலைத் துறை மேற்கொள்ளவில்லையாம்.
பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்படவில்லையாம். இந்த நிலையில், உடனடியாக மேம்பாலம் கட்டக்கோரி, பாமக சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலா் என்.குமாா் தலைமை வகித்தாா். கூட நகரம் ஊராட்சித் தலைவா் பி.கே.குமரன் வரவேற்றாா்.
மாவட்டத் தலைவா் வெங்கடேசன், மாவட்ட அமைப்புச் செயலா் பாலாஜி, ஒன்றியச் செயலா்கள் தினகரன், காமராஜ், அரவிந்த், ராமலிங்கம், நகரச் செயலா்கள் ரமேஷ், குமாா், முகமதுபாஷா, மாவட்ட பொறுப்பாளா்கள் குணசீலன், அன்பரசன், திருமலை, கோபி, சதீஷ், ஞானவேல், சுரேஷ், ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.