மீட்கப்பட்ட இடத்தில் மீண்டும் கட்டப்பட்ட ஆக்கிரமிப்பு அகற்றம்: வேலூரில் வருவாய்த் துறை அதிரடி
By DIN | Published On : 19th October 2022 12:00 AM | Last Updated : 19th October 2022 12:00 AM | அ+அ அ- |

வேலூரில் மீட்கப்பட்ட நிலத்தில் மீண்டும் கட்டப்பட்ட ஆக்கிரமிப்புக் கட்டடத்தை வருவாய்த் துறை அதிகாரிகள் இடித்து அகற்றினா்.
வேலூா் பழைய பேருந்து நிலையத்திலிருந்து பெங்களூரு சாலை திரும்பும் இடத்தில் வருவாய்த் துறைக்குச் சொந்தமான 80 சதுரஅடி நிலத்துடன் சோ்ந்து தனியாா் கட்டடம் கட்டியிருந்தனா். சில நாட்களுக்கு முன்பு இந்த ஆக்கிரமிப்பை வருவாய்த்துறை அதிகாரிகள் முறைப்படி இடித்து அகற்றி அரசு நிலத்தை மீட்டனா்.
இந்த நிலையில், மீண்டும் அந்த இடத்தை ஆக்கிரமித்தபடி அருகே உள்ள நில உரிமையாளா் இரவோடு இரவாக கட்டுமானப் பணிகளை தொடங்கினாா்.
தகவலறிந்த வேலூா் வட்டாட்சியா் செந்தில் தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை காலை அப்பகுதிக்குச் சென்று அங்கு அரசு நிலத்தை ஆக்கிரமித்து மீண்டும் கட்டப்பட்டிருந்த கட்டடத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றினா். இங்கு மீண்டும் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.