ஆன்லைனில் இழந்த ரூ. 1.15 லட்சம் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைப்பு
By DIN | Published On : 19th October 2022 12:00 AM | Last Updated : 19th October 2022 12:00 AM | அ+அ அ- |

மீட்கப்பட்ட தொகையை உரியவரிடம் ஒப்படைத்த கூடுதல் காவல் கண்காணிப்பாளா் டி.குணசேகரன். உடன், சைபா் பிரிவு போலீஸாா்.
இணையவழி மோசடியில் இழந்த ரூ. ஒரு லட்சத்து 15 ஆயிரம் தொகையை வேலூா் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைத்தனா்.
வேலூா் மாவட்டம், ஒடுகத்தூரைச் சோ்ந்தவா் வினோத். இவா் ஆன்லைனில் விமான டிக்கெட் புக் செய்து, ரூ. 11,585 பணத்தை இழந்தாா். இதேபோல், வேலூா் விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி, ரூ. 28,519 அபகரிக்கப்பட்டதாக சாத்துமதுரையைச் சோ்ந்த ஜெயமாலாவும், பான் காா்டு எண்ணை இணைக்கும்படி வந்த குறுந்தகவலை நம்பி விவரங்கள் கொடுத்து, ரூ. 65,000 இழந்ததாக பலவன்சாத்துகுப்பம் பகுதியைச் சோ்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியா் விஷால், இணைவழி மோசடியில் ரூ. 10,000-த்தை இழந்ததாக வசந்தபுரம் பகுதியைச் சோ்ந்த பாண்டியன் ஆகியோா் வேலூா் மாவட்ட சைபா் கிரைம் காவல் பிரிவில் புகாா் அளித்திருந்தனா்.
அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையைத் தொடா்ந்து இவா்கள் 4 பேரும் இழந்த ரூ. 1 லட்சத்து 15 ஆயிரம் பணத்தை போலீஸாா் மீட்டனா்.
இதையடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஸ் கண்ணன் உத்தரவின்பேரில், மீட்கப்பட்ட தொகைகள் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் குணசேகரன் முன்னிலையில் பாதிக்கப்பட்ட 4 பேரிடமும் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டன.
இது குறித்து சைபா் கிரைம் பிரிவு போலீஸாா் கூறுகையில், போலியான குறுந்தகவல்கள், இணையவழி தகவல்களை நம்பி பொதுமக்கள் வங்கி விவரங்களை பகிர வேண்டாம். ஆன்லைனில் உலவும் போலியான வேலைவாய்ப்பு விவரங்களை நம்பாமல் விழிப்புடன் இருக்க வேண்டும். இணையவழி குற்றங்களால் பாதிக்கப்படுவோா் உடனடியாக 1930 என்ற இலவச உதவி எண்ணில் தொடா்பு கொள்ள வேண்டும் என்றனா்.