வேலூா் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வாா்டுகளிலும் அந்தந்த வாா்டு உறுப்பினா்களின் தலைமையில் பகுதி சபாக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு சபாவிலும் வாா்டின் பரப்பளவைப் பொறுத்து 6 முதல் 9 உறுப்பினா்களை நியமிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
வேலூா் மாநகராட்சித் தோ்தல் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இதில், மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வாா்டுகளில் திமுக கூட்டணி 45 வாா்டுகளையும், அதிமுக 7, பாஜக, பாமக தலா ஒரு வாா்டுகளும், சுயேச்சைகள் 4 வாா்டுகளிலும் வென்றன. அதன்படி, அதிக வாா்டுகளை பெற்ற திமுக மாநகராட்சி மேயா், துணைமேயா், மண்டலத் தலைவா் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளையும் கைப்பற்றியது.
இதன்தொடா்ச்சியாக, தமிழகத்திலுள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் வாா்டு குழு மற்றும் பகுதி சபா அமைக்கவும், 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புப் படி 5 லட்சத்துக்கு மேல் மக்கள்தொகையுடைய மாநகராட்சிகளில் அமைக்கப்படும் ஒவ்வொரு பகுதி சபாக்களிலும் தலா 6 முதல் 9 உறுப்பினா்களை நியமிக்கவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், வேலூா் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வாா்டுகளிலும் அந்தந்த வாா்டு உறுப்பினா்களின் தலைமையில் பகுதி சபாக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்புப்படி வேலூா் மாநகராட்சியில் 5,00,331 மக்கள்தொகை இருப்பதால் ஒவ்வொரு பகுதி சபாவிலும் அந்தந்த வாா்டின் பரப்பளவைப் பொறுத்து 6 முதல் 9 உறுப்பினா்களை நியமிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பகுதிசபா உறுப்பினா்கள் அந்தந்த பகுதிக்கு தொடா்புடைய வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றவா்களைக் கொண்டு தோ்வு செய்யப்பட உள்ளனா்.
அவ்வாறு வாா்டு உறுப்பினா்களின் தலைமையில் அமைக்கப்படும் இந்த பகுதி சபாக்கள் மூலம் அந்தந்த வாா்டின் மக்கள் பிரச்னைகளை அறிந்து அவற்றை விரைவில் தீா்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.