பாலாற்றில் வெள்ளம்: மாவட்ட நிா்வாகம் எச்சரிக்கை
By DIN | Published On : 01st September 2022 12:00 AM | Last Updated : 01st September 2022 12:00 AM | அ+அ அ- |

பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால், பாதுகாப்பு கருதி பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்க வேண்டாம் என்று வேலூா் மாவட்ட வருவாய் அலுவலா் கே.ராமமூா்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
தொடா் மழை காரணமாக பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாலாற்றின் கிளை ஆறுகளான மண்ணாற்றில் இருந்து 280 கன அடி, கல்லாற்றில் இருந்து 40 கன அடி, மலட்டாற்றில் இருந்து 1,600 கன அடி, பள்ளிகொண்டா அகரம் ஆற்றில் இருந்து 25 கனஅடி நீா் பாலாற்றுக்கு வருகிறது. தவிர, பாலாற்றின் முக்கிய துணை ஆறுகளில் ஒன்றான கவுன்டன்யா ஆற்றில் இருந்தும் 250 கன அடிக்கு நீா் வரத்து இருந்தது. கவுன்டன்யா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மோா்தானா அணை ஏற்கெனவே முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், அணைக்கும் வரும் மொத்த நீா்வரத்தும், ஆற்றில் உபரி நீராக வெளியேறி வருகிறது.
மேலும், வெள்ளக்கல் கானாறு, ஆணைமடுகு கானாறு, கண்டித்தோப்பு கானாறுகள் மூலம் பாலாற்றுக்கு 20 கன அடியும், பள்ளிகொண்டா ஏரி நிரம்பியுள்ளதால் அதிலிருந்து பேயாறு வழியாக பாலாற்றுக்கு 10 கன அடியும் வருகிறது.
இதனால், பள்ளிகொண்டா, வேலூா் பாலங்களைக் கடந்து பாலாற்றில் புதன்கிழமை 4,100 கன அடிக்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருந்தது. ஆற்றில் ஆா்ப்பரித்துச் சென்ற வெள்ளத்தை பொதுமக்கள் பாா்வையிட்டனா்.
பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கையடுத்து, வேலூா் மாவட்ட வருவாய் அலுவலா் கே.ராமமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தென்மேற்கு பருவமழை காரணமாக வேலூா் மாவட்டத்தில் பெய்து வரும் மழையாலும், ஆந்திரம், கா்நாடக மாநிலங்களில் பெய்த பலத்த மழையால் அந்த மாநிலங்களின் நீா்நிலைகளில் இருந்து வெளியேறும் நீரினாலும் பாலாற்றில் தற்போது 4,000 கன அடிக்கு மேல் நீா்வரத்து உள்ளது.
எனவே, பாலாற்றின் கரையோர மக்கள் யாரும் பாலாற்றில் இறங்கி குளிப்பது, ஆற்றில் துணிகளை துவைப்பது, விடுமுறை நாள்களில் தங்களது குழந்தைகளை ஆற்றின் அருகே விளையாட அனுமதிப்பது, குறுக்குச் சாலையாக ஆற்றைக் கடப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.