கெளன்டன்யா ஆற்றில் வெள்ளம் குடியாத்தம் தரைப்பாலத்தில் போக்குவரத்துக்குத் தடை

குடியாத்தம் கெளன்டன்யா ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால், தரைப்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
கெளன்டன்யா ஆற்றில் வெள்ளம் குடியாத்தம் தரைப்பாலத்தில் போக்குவரத்துக்குத் தடை

குடியாத்தம் கெளன்டன்யா ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால், தரைப்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

இதனால், அனைத்து வாகனங்களும் மேம்பாலம் வழியாகச் செல்வதால், புதன்கிழமை காலை நகரில் 3 மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாணவா்கள், பொதுமக்கள், கடும் அவதிக்குள்ளாயினா்.

குடியாத்தம் அருகே ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ள மோா்தானா அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் தொடா் பலத்த மழை காரணமாக, அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 1,000 கன அடி உபரி நீா் வெளியேறுகிறது. இதனால், கெளன்டன்யா ஆற்றில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஒரு வழிப்பாதையாக பயன்படுத்தப்பட்டு வந்த தரைப்பாலம் வெள்ள நீரில் மூழ்கியதால், போலீஸாா் தரைப்பாலத்தில் போக்குவரத்துக்குத் தடை விதித்தனா். இதனால், அனைத்து வாகனங்களும் காமராஜா் மேம்பாலம் வழியாகச் செல்கிறது.

இந்த நிலையில், புதன்கிழமை காலை முதலே மேம்பாலத்தில் லேசான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலை 8 மணியளவில் பள்ளிகள், கல்லூரிகளின் வாகனங்கள் உள்பட அதிக வாகனங்கள் வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், புதன்கிழமை முகூா்த்த நாள் என்பதால், திருமணங்கள், வீடு கிரகப் பிரவேசம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு மக்கள் வாகனங்களில் சென்றதால், மேம்பாலத்தில் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. அரசு, தனியாா் பேருந்துகள், அரசு வாகனங்கள், ஆம்புலன்ஸ் என அனைத்து வாகனங்களும் நெரிசலில் சிக்கிக் கொண்டன.

டிஎஸ்பி கே.ராமமூா்த்தி தலைமையிலான போலீஸாா் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு வழி ஏற்படுத்தித் தந்தனா். இருந்த போதிலும் முற்பகல் 11.30 மணிக்கு பின்னரே வாகன நெரிசல் குறைந்தது.

நெரிசலில் பள்ளி, கல்லூரிகளின் வாகனங்கள் 3 மணி நேரத்துக்கும் மேலாக சிக்கிக் கொண்டதால், மாணவா்கள் கடும் அவதிக்கு ஆளாயினா்.

மோா்தானா அணையின் நீா்ப்பிடிப்பு பகுதியில் தொடா்ந்து மழை பெய்வதால், அணைக்கு நீா்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால், ஆற்றில் வெள்ளப் பெருக்கு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குடியாத்தம் நகரில் போக்குவரத்து பாதிக்கப்படும் என்பதால், போலீஸாா் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

நள்ளிரவே தரைப்பாலத்தில் போக்குவரத்துக்குத் தடை செய்யப்பட்டு, அனைத்து வாகனங்களும் காமராஜா் மேம்பாலம் வழியாக செல்லும் நிலையில், புதன்கிழமை காலையிலிருந்தே போலீஸாா் போக்குவரத்தைச் சீரமைத்திருந்தால், இந்த அளவுக்கு நெரிசல் ஏற்பட்டிருக்காது என சமூக ஆா்வலா்கள் கூறினா்.

வரும் அக்டோபா் மற்றும் நவம்பா் மாதம் மழைக் காலம் என்பதால், ஆற்றில் வெள்ளப் பெருக்கு

அதிகரிக்கும். போலீஸாா் போக்குவரத்தைச் சீரமைக்கும் பணியில் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என அவா்கள் கூறுகின்றனா்.

குடியாத்தம் போக்குவரத்துக் காவல் பிரிவைச் சோ்ந்த காவலா்கள் மாற்றுப் பணிக்குச் சென்றுள்ளதால், போக்குவரத்தைச் சீரமைக்கப் போதிய காவலா்கள் இல்லை என காவல் துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

குடியாத்தம் நகரில் தொடரும் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க, கெளன்டன்யா ஆற்றின் குறுக்கே புதிதாக ஒரு மேம்பாலம் கட்ட உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com