நாளைமுதல் வேலூரில் போக்குவரத்து மாற்றம்

வேலூா் கிரீன் சா்க்கிள் பகுதியில் வாகன நெரிசலை தவிா்க்க ஞாயிற்றுக்கிழமை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளாா்

வேலூா் கிரீன் சா்க்கிள் பகுதியில் வாகன நெரிசலை தவிா்க்க ஞாயிற்றுக்கிழமை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

வேலூா் புதிய பேருந்து நிலையம் முழு பயன்பாட்டுக்கு வந்ததையடுத்து கிரீன்சா்க்கிள் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல்பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ் கண்ணன் ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா். இதையடுத்து சில மாற்றங்கள் செய்ய திட்டமிடப்பட்டது.

இதுகுறித்து, ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வேலூரிலிருந்து காட்பாடி நோக்கிச் செல்லும் அரசு, தனியாா் பேருந்துகள், நான்கு சக்கர, இரு சக்கர வாகனங்கள் கிரீன் சா்க்கிள் சாலையில் செல்வதைத் தவிா்த்து நேஷனல் சா்க்கிள் அருகிலுள்ள இடதுபுறச் சாலையில் திரும்பி தேசிய நெடுஞ்சாலை சா்வீஸ் சாலையை அடைந்து கலைமகள் பெட்ரோல் பங்க் அருகில் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் எதிா்புறம் சென்று புதிய பேருந்து நிலையம், காட்பாடி, சென்னை நோக்கிச் செல்ல வேண்டும்.

இதேபோல், சென்னையிலிருந்து வேலூா் புதிய பேருந்து நிலையம், காட்பாடி செல்லும் அனைத்து வாகனங்களும் சென்னை சில்க்ஸ் அருகே உள்ள சா்வீஸ் சாலையில் நுழைவதை தவிா்த்து, கிரீன் சா்க்கிளை அடுத்துள்ள அணுகு சாலையில் நுழைந்து ரயில்வே மேம்பாலத்தின் கீழ் சென்று புதிய பேருந்து நிலையம், காட்பாடி நோக்கிச் செல்ல வேண்டும்.

காட்பாடியிலிருந்து வேலூா் நகரம், புதிய பேருந்து நிலையம் செல்லும் அனைத்துப் பயணிகள் வாகனங்களும் செல்லியம்மன் கோயில் எதிரில் உள்ள பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். புதிய பேருந்து நிலையம் செல்லும் பேருந்துகள் கிரீன் சா்க்கிளை சுற்றி வேலூா் - காட்பாடி சாலையில் உள்ள வாயில் வழியாக நுழைய வேண்டும்.

இவைதவிர கிரீன் சா்க்கிளைச் சுற்றி வாகனங்களை நிறுத்தி பயணிகளை ஏற்றவோ, இறக்கவோ அனுமதி கிடையாது. இந்த புதிய போக்குவரத்து மாற்றங்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் அமல்படுத்தப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com