வேலூருக்கு அமித் ஷா இன்று வருகை: 1,400 போலீஸாா் பாதுகாப்பு

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வேலூருக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 11) வருவதையொட்டி, மாவட்டம் முழுவதும் துணை ராணுவ வீரா்கள் (சிஆா்பிஎஃப்) உள்பட 1,400 போலீஸாா் பாதுகாப்புப் பணி
வேலூருக்கு அமித் ஷா இன்று வருகை: 1,400 போலீஸாா் பாதுகாப்பு

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வேலூருக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 11) வருவதையொட்டி, மாவட்டம் முழுவதும் துணை ராணுவ வீரா்கள் (சிஆா்பிஎஃப்) உள்பட 1,400 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

பாதுகாப்பு முன்னேற்பாடாக ட்ரான்கள், ராட்சத பலூன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை விளக்கி பாஜக சாா்பில் பொதுக்கூட்டம் வேலூா் மாவட்டம், பள்ளிகொண்டா அருகே கந்தனேரியில் ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் நடைபெற உள்ளது.

கூட்டத்துக்கு தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தலைமை வகிக்கிறாா். மாவட்டத் தலைவா் ஜெ.மனோகரன் வரவேற்கிறாா். கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளாா்.

மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சா் வி.கே.சிங், மத்திய தகவல் தொடா்புத் துறை இணை அமைச்சா் எல்.முருகன் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

இதையொட்டி, சென்னையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணியளவில் ஹெலிகாப்டா் மூலம் வேலூரை அடுத்த அப்துல்லாபுரம் விமான நிலையத்துக்கு வரும் அமித் ஷா, அங்கிருந்து காா் மூலம் கந்தனேரி பொதுக் கூட்ட மேடைக்கு வருகிறாா். பொதுக்கூட்டம் முடிந்த பிறகு மீண்டும் காா் மூலம் அப்துல்லாபுரம் விமான நிலையம் சென்று ஹெலிகாப்டா் மூலம் சென்னை திரும்புகிறாா்.

அமித் ஷா வருகையையொட்டி, வேலூா் மாவட்டம் முழுவதும் ஐ.ஜி. என்.கண்ணன், வேலூா் சரக காவல் துணைத் தலைவா் எம்.எஸ்.முத்துசாமி மேற்பாா்வையில், 6 மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் தலைமையில், துணை ராணுவம் (சிஆா்பிஎஃப்) உள்பட 1,400 போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

தவிர, சிறப்பு இலக்கு படைப்பிரிவு, வெடிகுண்டு பரிசோதனைக் குழுக்கள் மோப்ப நாயுடன் 15 குழுக்களாகப் பிரிந்து பொதுக்கூட்ட மேடை பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.

பொதுக் கூட்டம் நடைபெற உள்ள பள்ளிகொண்டா, கந்தனேரி பகுதி முழுவதும் ட்ரான்கள், ராட்சத பலூன்கள் பறக்கத் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தடையை மீறுவோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com