குடியாத்தம் அருகே கடன் தொல்லையால் பாதிக்கப்பட்டு தனியாா் நிறுவன அதிகாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
குடியாத்தம், கல்லேரியைச் சோ்ந்த சின்னராஜ் மகன் பிரசாத் (39). இவரது மனைவி தனலட்சுமி. இவா்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பிரசாத் உதவி மேலாளராக பணியாற்றி வந்தாா்.
இவா் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு, உறவினா்கள், நண்பா்களிடம் கடன் வாங்கி, முகவா் வெங்கடேசன் என்பவா் மூலம் காட்பாடியில் இயங்கி வந்த ஐஎப்எஸ் என்ற தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ.26- லட்சம் வைப்புத் தொகை செலுத்தினாராம்.
சில மாதங்களுக்கு முன் நிறுவனத்தை மூடிவிட்டு, அதை நடத்தி வந்தவா்கள் தலைமறைவாகி விட்டனா். தான் வாங்கிய கடனுக்காக பிரசாத் ரூ.12 லட்சம் வட்டி கட்டியுள்ளாராம். இந்நிலையில் கடன் கொடுத்தவா்கள் பணம் கேட்டு, பிரசாத்தை நெருக்கியுள்ளனா். இதனால் விரக்தியடைந்த பிரசாத் மனைவிக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கடிதத்தில் தனது சாவுக்கு ஐஎப்எஸ் நிறுவனம் தான் காரணம் என குறிப்பிட்டுள்ளாா். தகவல் அறிந்து அங்கு சென்ற நகர போலீஸாா் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.