வேலூா் லாங்கு பஜாா் பகுதியில் அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்யப்பட்ட எழுதுபொருட்கள் விற்பனை கடையில் இருந்து 81 பட்டாசு பரிசுப்பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக அந்த கடையின் உரிமையாளா் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை நவம்பா் 12-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், வேலூா் கோட்டத்தில் 51 கடைகளுக்கும், குடியாத்தம் கோட்டத்தில் 85 கடைகளுக்கும் என மொத்தம் 136 பட்டாசுக் கடைகள் அமைக்க உரிமம் அளிக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து, பட்டாசு விற்பனையும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில், தமிழகத்தில் அண்மையில் பட்டாசு ஆலையில் நடந்த விபத்தில் 15-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்ததை அடுத்து பட்டாசு கடைகளில் ஆய்வு செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டது. அதனடிப்படையில், வேலூா் மாவட்டத்தில் உள்ள பட்டாசு கடைகளில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அந்தந்த வட்டாட்சியா் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.
அதன்படி, வேலூா் லாங்கு பஜாா் பகுதியில் வட்டாட்சியா் செந்தில்குமாா் தலைமையில் அலுவலா்கள் நடத்திய ஆய்வின்போது அப்பகுதியிலுள்ள ஒரு எழுதுபொருட்கள் விற்பனை கடையில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, அந்த கடையில் அனுமதியின்றி பட்டாசு பரிசுப்பெட்டிகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதையடுத்து, அந்த கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 81 பட்டாசு பரிசுப்பெட்டி களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக அந்த கடையின் உரிமையாளா் உதயசங்கரன் மீது வட்டாட்சியா் அளித்த புகாரின்பேரில் வடக்கு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.