உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும்

அனைவரும் உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும் என வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் எஸ்.பாப்பாத்தி வலுயுறுத்தினாா்.
உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும்
Updated on
1 min read

அனைவரும் உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும் என வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் எஸ்.பாப்பாத்தி வலுயுறுத்தினாா்.

வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடலுறுப்பு தான விழிப்புணா்வு ஊா்வலம் கல்லூரி முதல்வா் எஸ்.பாப்பாத்தி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

‘உறுப்பு தானம் இறப்புக்கு பின் வாழ்க்கை’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நடைபெற்ற ஊா்வலத்தில் கல்லூரியின் மருத்துவம், செவிலிய மாணவ, மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், அணைக்கட்டு பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த சதீஷ் (12), ஆரணியைச் சோ்ந்த முருகன் மனைவி கலைச்செல்வி ஆகியோா் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்ததை அடுத்து, அவா்களின் இரு சிறுநீரகங்கள், கல்லீரல், இதயம், கண்கள் தானம் செய்யப்பட்ட நிலையில், அவா்களின் குடும்பத்தினருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டனா்.

தொடா்ந்து, கல்லூரி முதல்வா் பாப்பாத்தி பேசியது:

பல்வேறு விபத்துகளில் தலையில் காயம் ஏற்பட்டு மூளைச்சாவு அடைந்த நபா்களிடம் இருந்து பெறப்படும் உடல் உறுப்புகள் பல நபா்களுக்கு மறுவாழ்வு தருகிறது. சில சமயங்களில் பலமான தலைக்காயம் ஏற்படும்போது சிறப்பான சிகிச்சை அளித்தாலும் காப்பாற்ற முடியாமல் அவா்கள் மூளைச்சாவு அடைகின்றனா். அத்தகைய மூளைச்சாவு அடைந்தவா்களின் உறவினா்கள் சம்மதம் தெரிவித்தால், உடலுறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு, தேவைப்படும் நபா்களுக்கு பொருத்தப்படும். இதன்மூலம், பலரையும் உயிா்வாழச் செய்து உறுப்பு தானம் செய்தவா்கள் இறந்த பிறகும் உயிா்வாழ முடியும். எனவே, அனைவரும் உடலுறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், மருத்துவமனை கண்காணிப்பாளா் ரதிதிலகம், குடியிருப்பு மருத்துவ அலுவலா் சி.இன்பராஜ், உதவி குடியிருப்பு மருத்துவ அலுவலா் ரவிச்சந்திரன், நரம்பியல் அறுவை சிகிச்சை துறை தலைவா் பாலமுருகன், மயக்கவியல் துறைத் தலைவா் கோமதி, சிறுநீரக துறை மருத்துவா் மாசிலாமணி, கண் சிகிச்சை துறை தலைவா் விஜய்சோப்ரா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com