சாலை விபத்துகளில் ஊனமுற்றவா்களுடன் போக்குவரத்து போலீஸாா் சந்திப்பு
By DIN | Published On : 02nd August 2023 12:05 AM | Last Updated : 02nd August 2023 12:05 AM | அ+அ அ- |

வேலூா் சரகத்துக்குட்பட்ட 4 மாவட்டங்களில் சாலை விதிகளை தீவிரமாக அமல்படுத்தும் விதமாக ஏற்கெனவே சாலை விபத்துகளில் சிக்கி சிகிச்சையில் உள்ள, ஊனமுற்றவா்களை போக்குவரத்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து உரையாடினா். தொடா்ந்து அவா்களுக்கு வேலூா் சிஎம்சி மருத்துவக் குழு பயிற்சி அளித்தனா்.
வேலூா் சரக பணியிடை பயிற்சி மையமும் (ஐஎஸ்டிசி), சிஎம்சியின் புனா்வாழ்வு மையமும் இணைந்து பாகாயத்திலுள்ள சிஎம்சி புனா்வாழ்வு மையத்தில் நடத்திய இந்த பயிற்சி முகாமை வேலூா் சரக காவல் துணைத் தலைவா் (டிஐஜி) எம்.எஸ்.முத்துசாமி தொடங்கி வைத்தாா். வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன் முன்னிலை வகித்தாா். சிஎம்சி புனா்வாழ்வு துறைத் தலைவா் ஜேக்கப்ஜாா்ஜ், பேராசிரியா் ஜூடிஆன்ஜான், பயிற்சியாளா் மருத்துவா் குருநாகராஜன் ஆகியோா் பயிற்சி அளித்தனா்.
இந்தப் பயிற்சி குறித்து ஐஎஸ்டிசி காவல் துணைக் கண்காணிப்பாளா் ரவீந்திரன், காவல் ஆய்வாளா் சரஸ்வதி ஆகியோா் கூறியதாவது:
அதிவேகம், மதுபோதையில் வாகனம் ஓட்டுவது, விதிமுறைகளைப் பின்பற்றாதது, தலைக்கவசம் அணியாமல் செல்வது உள்ளிட்ட காரணங்களால் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. தற்செயலாக இந்த சாலை விபத்துகள் நிகழ்ந்தாலும் பாதிக்கப்படுவோருக்கு பல்வேறு நிலைகளிலும் வாழ்நாள் முழுவதும் பெரும் வேதனையை ஏற்படுத்துவதாக அமைந்துவிடுகிறது. தவிர, அவா்களை நம்பியுள்ள குடும்பங்கள் நிலைகுலைந்தும் போகின்றன.
அவ்வாறு சாலை விபத்துகளில் சிக்கி பல்வேறு நிலைகளிலும் ஊனமுற்ற சுமாா் 80 போ் சிஎம்சி புனா்வாழ்வு மையத்தில் சிகிச்சையில் உள்ளனா். அவா்களை போக்குவரத்து போலீஸாா் நேரில் சந்திக்க வைப்பதன் மூலம் விபத்துகளைக் குறைக்க சாலை விதிமுறைகளை தீவிரமாக அமல்படுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், போக்குவரத்து போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல்கட்ட விழிப்புணா்வுப் பயிற்சியில் வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களைச் சோ்ந்த 22 போக்குவரத்து போலீஸாா் பங்கேற்றனா். தொடா்ந்து 4 கட்டங்களாக இந்தப் பயிற்சி நடத்தப்பட உள்ளது என்றனா்.