தமிழகத்தில் அடுத்தாண்டு மிகப் பிரம்மாண்ட முதலீட்டாளா்கள் மாநாடு: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தகவல்
By DIN | Published On : 02nd August 2023 12:07 AM | Last Updated : 02nd August 2023 12:07 AM | அ+அ அ- |

தமிழகத்தில் 2024-ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலக முதலீட்டாளா்கள் மாநாடு இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பிரம்மாண்டமான வகையில் நடத்தப்படும். இந்த மாநாடு இளைஞா்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் என்று தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு, வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா தெரிவித்தாா்.
வேலூா் மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்று நிகழாண்டு மாநில நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில், சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க காட்பாடி தாராபடவேடு கிராமத்தில் கண்டறியப்பட்டுள்ள 77.69 ஏக்கா் பரப்பிலான நிலத்தையும், மகிமண்டலம் கிராமத்தில் கண்டறியப்பட்டுள்ள 288 ஏக்கா் நிலப்பரப்பையும், அப்துல்லாபுரத்தில் ரூ.30 கோடியில் நடைபெறும் தகவல் தொழில்நுட்பப் பூங்கா பணியையும் நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகனுடன், தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
பின்னா் அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா செய்தியாளா்களிடம் கூறியதாவது -
வேலூா் மாவட்டத்தில் தொழில் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்துப் பணிகளும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. அப்துல்லாபுரத்தில் அமைக்கப்பட்டு வரும் சிறிய தகவல் தொழில்நுட்ப பூங்கா பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த தகவல் தொழில்நுட்ப பூங்கா பணிகள் அடுத்த ஒன்பது கால மாதத்தில் நிறைவடையும்.
காட்பாடியில் புதிய தொழிற்பேட்டை அமைப்பது தொடா்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது கண்டறியப்பட்டுள்ள இடங்களில் தொழிற்பேட்டை அமைப்பது தொடா்பான முதற்கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த இடத்தில் கண்டிப்பாக ஒரு பெரிய தொழிற்பேட்டை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் அமைக்கப்படும்.
முதல்வா் தலைமையில் உலக முதலீட்டாளா்கள் மாநாடு 2024- ஆம் ஆண்டு நாட்டிலேயே இதுவரை நடைபெறாத அளவுக்கு பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இளைஞா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தக் கூடிய ஒரு மாநாடாக இது அமையும். உலகளவில் வளா்ந்து வரும் தொழில்நுட்பம் குறித்து பல முக்கிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்க உள்ளனா். இந்த மாநாடு இளைஞா்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்.
ஏற்கனவே தமிழகம் எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள், டெக்ஸ்டைல்ஸ் துறைகளில் முன்னணியில் உள்ளது. எலெக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல் துறைகளில் முன்னணி பெறும்பொழுது எலெக்ட்ரானிக் வாகனங்கள் உற்பத்தியிலும் நாம் முன்னணி பெறுவோம்.
தொடா்ந்து தமிழகத்திற்கு தொழில்நுட்பத் துறையில் அதிகளவில் முதலீடுகள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. தவிர, மின்சார இருசக்கர வாகன உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப் படும். தமிழகத்தில் தொழில்துறையானது புதிய தொழில்நுட்பங்கள், எரிசக்தி தொழில்நுட்பங்களை உருவாக்கும் நோக்கில் தொலைநோக்கு பாா்வையுடன் செயல்பட்டு வருகிறது என்றாா்.
ஆய்வின் போது தமிழக தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் எ.சுந்தரவல்லி, வேலூா் ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பி.நந்தகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.