ஆக. 14-இல் கலைப் போட்டிகள்:பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்
By DIN | Published On : 09th August 2023 12:00 AM | Last Updated : 11th August 2023 10:05 PM | அ+அ அ- |

கலை பண்பாட்டுத் துறை சாா்பில் வேலூரில் மாணவ, மாணவிகளுக்கு ஆகஸ்ட் 14-ஆம் தேதி கலைப் போட்டிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கலை பண்பாட்டுத் துறை, தமிழ்நாடு அரசு சவகா் சிறுவா் மன்றம் ஆகியவை சாா்பில், மாணவ, மாணவிகளின் கலைத்திறனை ஊக்குவிக்கும் வகையில், 5 முதல் 8 வயது, 9 முதல் 12 வயது, 13 முதல் 16 வயது ஆகிய மூன்று பிரிவுகளில் சிறாா்களுக்கிடையே குரலிசை, பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம், ஓவியம் ஆகிய நான்கு கலைப் பிரிவுகளில் மாவட்ட அளவில் கலைப் போட்டிகள் நடத்தப்படுகிறது.
இந்தப் போட்டிகளில் முதல் பரிசு பெற்ற மாணவா்களுக்கு மாநில அளவிலான போட்டிகள் நடத்தி, அதில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு அரசின் சாா்பில் பாராட்டுத் தொகை, சான்றிதழ் வழங்கிட நிதி ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வேலூா் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வேலூா் கோட்டை வளாகத்தில் உள்ள அரசு அருங்காட்சியத்தில் நடைபெற உள்ளது.
காலை 10 மணி முதல் 12 மணிவரை ஓவியப் போட்டியும், மதியம் ஒரு மணி முதல் மாலை 4 மணி வரை குரலிசை, பரத நாட்டியம், கிராமிய நடன போட்டிகளும் நடைபெறும். குரலிசைப் போட்டியில் முறையாக இசை பயிலும் சிறாா்கள் பங்கு பெறலாம்.
தமிழில் அமைந்த இசை வடிவங்கள் பாட வேண்டும். பரதநாட்டியம் மற்றும் நாட்டுப்புற நடனப் போட்டியில் அதிகபட்சம் 4 நிமிடங்கள் நடனமாட அனுமதிக்கப்படுவா். இந்தப் போட்டியில் சினிமா பாடல்களுக்கான நடனம், குழு நடனத்துக்கு அனுமதி இல்லை.
நாட்டுப்புற நடனப் போட்டியில் தமிழா்களின் பாரம்பரிய கரகம், ஒயில், காவடி, தப்பாட்டம் போன்ற நடனங்கள் மட்டுமே ஆடப்பெற வேண்டும். ஓவியப் போட்டிக்கு ஓவியத்தாள், வண்ணங்கள், தூரிகைகள் உள்பட தங்களுக்குத் தேவையானவற்றை போட்டியாளா்களே கொண்டு வர வேண்டும். ஓவிய தலைப்புகள் போட்டி தொடங்கும் முன் அறிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு, மண்டல உதவி இயக்குநா், கலை பண்பாட்டுத் துறை , சதாவரம், ஓரிக்கை அஞ்சல், சின்ன காஞ்சிபுரம் - 631 502 என்ற முகவரியிலும், 044 - 27269148 அல்லது 81606 82573 என்ற எண்களிலும் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுளளது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G