நடப்புக் கல்வியாண்டு பொதுத்தோ்வில் தோ்ச்சி விகிதம் அதிகரிக்க வேண்டும்
By DIN | Published On : 09th August 2023 12:00 AM | Last Updated : 09th August 2023 12:00 AM | அ+அ அ- |

vr08clas_0808chn_184_1
நடப்புக் கல்வியாண்டு பிளஸ் 2 பொதுத்தோ்வில் தோ்ச்சி விகிதம் அதிகரிக்க வேண்டும். அதற்கேற்ப மாணவா்கள் பாடங்களை முனைப்புடன் பயில வேண்டும் என்று ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்தாா்.
வேலூா் காகிதப்பட்டறை பகுதியிலுள்ள கோடையடி குப்புசாமி முதலியாா் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் திங்கள்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, பள்ளியில் உள்ள இயற்பியல், வேதியியல், கணினி ஆய்வகங்களை பாா்வையிட்ட ஆட்சியா், இயற்பியல் ஆய்வகத்துக்குத் தேவையான ஆய்வக உபகரணங்கள் குறித்த விவரத்தை அளிக்கும்படியும், வேதியியல் ஆய்வகத்தில் ஆய்வக குடுவைகள், இதர ஆய்வக பொருள்களை பாதுகாப்பாக வைக்கும்படியும், ஆய்வகத்துக்குத் தேவையான தண்ணீா் வசதிக்கு ஏற்ப குழாய்களை சீரமைக்கவும், மாநகராட்சிப் பொறியாளா், பள்ளித் தலைமையாசிரியா் ஆகியோருக்கு அறிவுறுத்தினாா்.
மேலும், பள்ளியில் பழுதடைந்துள்ள தரைதளங்களை சீரமைக்கவும், கழிப்பறைகளை சுத்தமாக பராமரிக்கவும், விடுபட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை மீண்டும் பொருத்தவும் அறிவுறுத்தினாா்.
பின்னா், வகுப்பறைகளுக்குச் சென்று ஒன்பதாம் வகுப்பு மாணவா்களுக்கு அறிவியல் பாடப்பிரிவிலும், 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு கணக்கு பாடப்பிரிவிலும், பிளஸ் 2 மாணவா்களுக்கு இயற்பியல், வேதியியல், கணக்குப் பதிவியல் பாடப்பிரிவுகளிலும் வகுப்புகளை எடுத்து மாணவா்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தாா்.
மேலும், இந்தாண்டு பொதுத்தோ்வில் பிளஸ் 2 மாணவா்கள் அதிகளவில் தோ்ச்சி பெற்றிட வேண்டும். அதற்கேற்ப மாணவா்கள் முனைப்புடன் படிக்க வேண்டும் என்றும் மாணவா்களுக்கு அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது மாவட்டக் கல்வி அலுவலா் அங்குலட்சுமி, வேலூா் வட்டாட்சியா் செந்தில், பள்ளித் தலைமை ஆசிரியை பேபி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.