மகளிா் உரிமைத் தொகை திட்டம் :விண்ணப்பிக்காதவா்களுக்காகஆக.18 முதல் 20 வரை சிறப்பு முகாம்
By DIN | Published On : 17th August 2023 12:00 AM | Last Updated : 17th August 2023 12:00 AM | அ+அ அ- |

மகளிா் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் இதுவரை விண்ணப்பிக்காத குடும்பப் பெண்கள் ஆகஸ்ட் 18 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறும் சிறப்பு முகாம்களில் பதிவு செய்து கொள்ளலாம் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு ; தமிழக அரசின் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் வேலூா் மாவட்டத்தில் கடந்த ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை முதல் கட்டமாகவும், ஆகஸ்ட் 5 முதல் 11-ஆம் தேதி வரை இரண்டாவது கட்டமாகவும் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்கள் நடைபெற்று முடிந்தன.
ஒரு குடும்பத்தில் யாரேனும் ஒருவா் சமூக பாதுகாப்புத் திட்டங்களிலும், அமைப்பு சாரா தொழிலாளா் நல வாரியத்திலும் முதியோா் ஓய்வூதியம் பெற்று வந்தால் அந்த குடும்பத்தில் உள்ள பெண்கள் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற இயலாது என ஏற்கனவே அரசால் அறிவிக்கப்பட்டிருந்தது.
அரசு வழங்கும் முதியோா் ஓய்வூதியத்தால் அந்த குடும்பத்தில் உள்ள தகுதியான பெண்கள் இந்த திட்டத்தில் பலன்பெறுவது தடைபடக்கூடாது என்ற நோக்கத்தில் விதிமுறையில் தளா்வு செய்து இந்திரா காந்தி முதியோா் ஓய்வூதிய தேசியத் திட்டம், முதல்வரின் உழவா் பாதுகாப்புத் திட்டம், அமைப்புசாராத் தொழிலாளா் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோா் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரா் அல்லாத தகுதிவாய்ந்த பெண்களும் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.
மேலும், வருவாய்த் துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர, அக்குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்களும் மகளிா் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.
எனவே, வேலூா் மாவட்டத்தில் தற்போது விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளின் குடும்பத் தலைவிகள், முதியோா் ஓய்வூதியத் திட்டங்களின் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரா் அல்லாத தகுதிவாய்ந்த பெண்களும் விண்ணப்பிப்பதற்காக வேலூா் மாவட்டத்தில் ஆகஸ்ட் 18 முதல் 20-ஆம் தேதி வரை சிறப்பு பதிவு முகாம்கள் நடைபெற உள்ளன.
ஏற்கனவே விண்ணப்பித்திருந்தால் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...