மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் சமரசத்துக்கு இடமில்லை: அமைச்சா் துரைமுருகன்
By DIN | Published On : 01st June 2023 11:10 PM | Last Updated : 02nd June 2023 07:40 AM | அ+அ அ- |

நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன்
மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதை தமிழகம் ஒருபோதும் அனுமதிக்காது. இதில் எந்தவித சமரசத்துக்கும் இடம் கிடையாது என்று அமைச்சா் துரைமுருகன் திட்டவட்டமாகத் தெரிவித்தாா்.
வேலூா் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் குடிநீா் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
மேக்கேதாட்டு அணை இரு மாநில மக்களுக்கும் பயனளிக்கக் கூடியது, இந்த அணை கட்டுவது தொடா்பாக, தமிழக அரசுடன் கலந்துபேசி செயல்படுத்தத் தயாராக இருப்பதாக கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவக்குமாா் தெரிவித்துள்ளாா்.
இப்போதுதான் பதவிக்கு வந்துள்ள சிவக்குமாருக்கு மேக்கேதாட்டு அணை பிரச்னை குறித்து முழுமையாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
மேக்கேதாட்டுவில் அணை கட்டினால் தமிழகத்துக்கு கிடைக்கக்கூடிய தண்ணீா் பெருமளவில் பாதிக்கப்படும். எனவே, மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதை தமிழகம் ஒருபோதும் அனுமதிக்காது. இதில் எந்தவித சமரசமும் கிடையாது.
காவிரியில் மேக்கேட்டு அணை மட்டும் பிரச்னை அல்ல, இதை 30 ஆண்டுகளாக கூா்ந்து கவனித்து வருகிறேன். காவிரி தொடா்பான தீா்ப்பாயத்தை நடத்திய அனுபவம் எனக்கு உண்டு.
காவிரியில் இருந்து எவ்வளவு தண்ணீா் தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என்பதற்காக அமைக்கப்பட்ட தீா்ப்பாயத்திலும் இந்த பிரச்னை எழுப்பப்படவில்லை. உச்ச நீதிமன்றத்திலும் இந்த பிரச்சனை எழுப்பப்படவில்லை. ஆனால், கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவக்குமாா், ஏதோ ஒரு பிரச்னையை எழுப்ப வேண்டும் என்பதற்காக பேசி வருகிறாா்.
எக்காரணம் கொண்டும் தமிழக அரசு மேக்கேதாட்டு அணை பிரச்னையை ஒருபோதும் விட்டுக் கொடுக்காது.
வேலூா் மாவட்டம், அணைக்கட்டு வட்டத்திலுள்ள மலைப் பகுதியில் மக்களின் நலன் கருதி, சாலை அமைக்க வனத் துறையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் சாலை அமைக்கப்படும்.
வேலூா் மாவட்டத்தில் தற்போது காவிரி குடிநீா் விநியோகம் பராமரிப்பு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் வெள்ளிக்கிழமை (ஜூன் 2) முதல் தொடங்கும். மாவட்டத்தில் குடிநீா் பற்றாக்குறை ஏற்பட்டாமல் இருக்க மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று ஆட்சியா், மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீா் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...