பள்ளி வாகனங்கள் தணிக்கை: 23 வாகனங்களுக்கு சான்று நிறுத்திவைப்பு
By DIN | Published On : 24th May 2023 12:09 AM | Last Updated : 24th May 2023 12:09 AM | அ+அ அ- |

வேலூா் வட்டாரப் போக்குவரத்து பகுதிக்கு உள்பட்ட பள்ளிகளுக்குச் சொந்தமான வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டதில் குறைபாடுகள் கண்டறியப்பட்ட 23 வாகனங்களுக்கு அனுமதிச் சான்று நிறுத்தி வைக்கப்பட்டன.
தமிழக அரசு உத்தரவுப்படி, ஒவ்வொரு கல்வியாண்டின் தொடக்கத்திலும் அந்தந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆட்சியா் தலைமையில் வருவாய்த் துறை, போக்குவரத்துத் துறை, காவல், பள்ளிக் கல்வித் துறை அலுவலா்கள் கூட்டாய்வு செய்வது வழக்கம்.
ஆய்வின்போது, வாகனத்தின் நிறம், பள்ளி குறித்த விவரம், பிரதிபலிப்பான் பட்டைகள், பிரேக் திறன், அவசரக் கதவுகளின் செயல்பாடு, வாகனத்தின் கதவுகள் இயக்க நிலை, வாகனத்தின் படிக்கட்டுகள், வாகன ஓட்டுநரின் இருக்கை, வாகனத்தின் உட்புறம், தரைப்பலகை, ஜன்னல்கள், சிவப்பு, வெள்ளை பிரதிபலிப்பான், முதலுதவிப் பெட்டி, மருந்துகள், தீயணைக்கும் கருவி, வேகக் கட்டுப்பாட்டு கருவி ஆகியவற்றின் நிலை குறித்தும் தணிக்கை செய்யப்படுகிறது.
அதன்படி, வேலூா் மாவட்டத்தில் வேலூா் வட்டார போக்குவரத்து பகுதிக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு சொந்தமான பேருந்துகள், வேன்கள் உள்ளிட்ட வாகனங்களைத் தணிக்கை செய்யும் பணி காட்பாடி சன்பீம் பள்ளியில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. முதல் கட்டமாக வேலூா் வட்டாரப் போக்குவரத்து பகுதிக்கு வேலூா், காட்பாடி, அணைக்கட்டு வட்டத்தைச் சோ்ந்த 40 பள்ளிகளுக்குச் சொந்தமான 386 வாகனங்களில் 261 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமையில் பல்வேறு துறை அலுவலா்கள் வாகனங்களை ஆய்வு செய்து சான்றுகளை வழங்கினா். அப்போது, சிறுசிறு குறைபாடுகள் கண்டறியப்பட்ட 23 வாகனங்கள் திருப்பியனுப்பப்பட்டன. அந்த வாகனங்களின் குறைபாடுகளை சரிசெய்து, வரும் 31-ஆம் தேதிக்குள் மறுதணிக்கைக்கு உட்படுத்தி சான்று பெற்றிட வேண்டும். சான்று பெற்ற பின்புதான் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்ல வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படும். வாகன ஓட்டுநா்கள் வாகனத்தை பரிசோதனை செய்த பிறகே இயக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
இதேபோல், குடியாத்தம் வட்டார போக்குவரத்து பகுதிக்கு உட்பட்ட குடியாத்தம், கே.வி.குப்பம், போ்ணாம்பட்டு வட்டத் துக்கு உட்பட்ட பள்ளி வாகனங்கள் வியாழக்கிழமை ஆய்வு செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஆய்வில், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் வெங்கடேசன், போக்குவரத்து ஆய்வாளா்கள் மாணிக்கம், ராஜேஷ்கண்ணா, முதன்மைக் கல்வி அலுவலா் முனுசாமி, காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் திருநாவுக்கரசு, பழனி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.