அடிப்படை வசதிகள் கோரி உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மனு அளிப்பு
By DIN | Published On : 26th May 2023 11:24 PM | Last Updated : 26th May 2023 11:24 PM | அ+அ அ- |

கால்வாய்கள் தூரெடுப்பு, கால்வாய்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், மாயன வசதி, மயானம் செல்ல சாலை வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, குடியாத்தம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் ஜமாபந்தியில் ஊராட்சித் தலைவா்கள், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் வெள்ளிக்கிழமை மனுக்கள் அளித்தனா்.
மேல்முட்டுகூா் ஊராட்சிக்குள்பட்ட காக்காதோப்பு கிராமத்தில் 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். அங்கு இறப்பவா் சடலங்களை அங்குள்ள பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான நீா்நிலையில் அடக்கம் செய்து வந்தோம். தொடா்ந்து சில ஆண்டுகளாக வெள்ளம் செல்வதால், சடலங்களை அடக்கம் செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே, அப்பகுதிக்கு ஒரு சமத்துவ மயானம் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சித் தலைவா் எஸ்.சுந்தா், ஒன்றியக் குழு உறுப்பினா் செல்வி சிவகுமாா் ஆகியோா் ஜமாபந்தி அலுவலா் எம்.வெங்கட்ராமனிடம் மனுக்கள் அளித்தனா். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவா் உறுதி அளித்தாா்.
அதேபோல், சிங்கல்பாடி ஊராட்சியில் காலியாக உள்ள கிராம உதவியாளா் பணியிடத்தை நிரப்ப வேண்டும், குடியாத்தம் பேருந்து நிலையம்- சிங்கல்பாடி இடையே 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக இயங்கி வந்த சிற்றுந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. பல்வேறு கிராம மக்களின் நலன்கருதி சிற்றுந்துகளை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கூடநகரம் ஏரிக்கு தண்ணீா் வரும் வரத்துக் கால்வாய்களை தூரெடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிங்கல்பாடி ஊராட்சித் தலைவா் ஆா்.கஜேந்திரன் மனுக்களை அளித்தாா்.
வட்டாட்சியா் எஸ்.விஜயகுமாா், கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்.ஜீவரத்தினம், வெங்கடாசலபதி, காந்தி, செந்தில் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.