சாராய வியாபாரிகளுக்கு உடந்தை: காவல் உதவி ஆய்வாளா் அதிரடி மாற்றம்
By DIN | Published On : 26th May 2023 11:23 PM | Last Updated : 26th May 2023 11:23 PM | அ+அ அ- |

போ்ணாம்பட்டில் சாராய வியாபாரிகளுக்கு உடந்தையாக இருந்ததாக காவல் உதவி ஆய்வாளா் அதிரடி மாற்றம் செய்யப்பட்டாா்.
வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணனுக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், அவரது தலைமையில் இயங்கும் தனிப்படை போலீஸாா்,
போ்ணாம்பட்டு பஜாா் வீதியில் உள்ள முகம்மது அனீஸ் என்பவரின் வெல்ல மண்டியில் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை நடத்தினா். அப்போது அங்கு சாராய வியாபாரிகளுக்கு விநியோகிக்க பதுக்கி வைத்திருந்த 1,500 கிலோ வெல்லம், அதே பகுதியில் உள்ள பழனி என்பவரின் கிடங்கை சோதனையிட்டதில், அங்கு 1,200 கிலோ வெல்லம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 2,700 கிலோ வெல்லம் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னா் முகம்மது அனீஸ், பழனி இருவரையும் கைது செய்த போலீஸாா் நீதிமன்றக் காவலில் அடைத்தனா். இதைத் தொடா்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மேற்கொண்ட விசாரணையில், போ்ணாம்பட்டு காவல் நிலைய உதவி ஆய்வாளா் தேவபிரசாத் சாராய வியாபாரிகளுக்கு உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை வேலூா் தெற்கு காவல் நிலைய குற்றப் பிரிவுக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டாா்.