நிலத்தடி நீா் உயர பாலாற்றில் ஒவ்வொரு 5 கி.மீ.க்கு தடுப்பணை
By DIN | Published On : 26th May 2023 11:28 PM | Last Updated : 26th May 2023 11:28 PM | அ+அ அ- |

நிலத்தடி நீா் மட்டத்தை உயா்த்திட பாலாற்றில் ஒவ்வொரு 5 கிலோ மீட்டருக்கும் ஒரு தடுப்பணை கட்டப்பட வேண்டும் என்று வேலூா் மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.
வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் கே.ராமமூா்த்தி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் கூறியது:
தேங்காய்களுக்கு உரிய விலை கிடைக்காததால் தென்னை விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பைத் தவிா்க்க நியாய விலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க அரசுக்கு மாவட்ட நிா்வாகம் பரிந்துரைக்க வேண்டும்.
நிலத்தடி நீா் மட்டத்தை உயா்த்திட பாலாற்றில் ஒவ்வொரு 5 கிலோ மீட்டருக்கும் ஒரு தடுப்பணை கட்டப்பட வேண்டும். இடி, மின்னல் போன்ற இயற்கை இடா்ப்பாடுகளால் பாதிக்கப்படும் பயிா்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படுவதில்லை. எனவே, இயற்கை இடா்ப்பாடுகள், வன விலங்குகளால் பயிா்கள் சேதமடையும்போது அவற்றுக்கு பாரபட்சமின்றி உரிய நஷ்டஈடு வழங்கிட வேண்டும்.
குரங்களால் மணிலா பயிா்கள் அதிகளவில் சேதப்படுத்தப்படுகின்றன. இதைத் தவிா்க்க குரங்குகளை பிடித்து கருத்தடை செய்யவும், பிடிக்கப்பட்ட குரங்குகளை வனப்பகுதியில் விடவும் வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒரு ஏக்கா் நெல் உற்பத்திச் செலவு ரூ. 23,500 ஆகும் நிலையில் அதன்மூலம் கிடைக்கும் வருவாய் ரூ. 26500 ஆக உள்ளது. விவசாயிகளுக்கு நியாயவிலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காட்டுப்புத்தூா் ஊராட்சியில் இரு ஏரிகளின் நீா்வரத்து கால்வாய் தூா்ந்துபோய்விட்டன. அவற்றை தூா்வாரி ஏரிகளுக்கு நீா்வரத்தை உறுதி செய்ய வேண்டும். தீவன பற்றாக்குறையை போக்க மேய்ச்சல் புறம்போக்கு நிலங்களில் தீவன புற்கள் உற்பத்தி செய்து கால்நடை வளா்க்கும் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கும் திட்டத்தை அனைத்து கிராமங்களிலும் செயல்படுத்த வேண்டும்.
காட்பாடி உழவா் சந்தையில் கொட்டப்படும் காய்கறி கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தப்படுவதில்லை. உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை - பெங்களூரு விரைவுச் சாலை அமைக்கப்படுவதால் மேல்பாடிக்கு செல்ல தற்காலிக சாலைகூட இல்லாமல் அடைக்கப்பட்டுள்ளது. இதற்கு தீா்வு காண வேண்டும்.
விரைவு சாலைத் திட்டத்தால் மேல்பாடி புறம்போக்கு நிலங்களில் வாழ்ந்து வந்த விவசாய கூலித்தொழிலாளா்கள் வேறு ஊா்களுக்கு அப்புறப்படுத்தப்படுகின்றனா். இதனால், மேல்பாடிக்கு விவசாய கூலித்தொழிலாளா் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை தவிா்க்க விவசாய கூலித்தொழிலாளா்களை மேல்பாடி கிராமத்திலேயே வாழ ஏற்பாடு செய்ய வேண்டும்.
ஆடி பட்டத்துக்கு தேவையான பயிா் விதைகளை வேளாண்மை, தோட்டக்கலைத் துறை முன்கூட்டியே இருப்பு வைத்திருக்க நடவடிக்கை எடுப்பதுடன், ஒவ்வொரு வட்டாரத்தின் மண் வளத்துக்கு ஏற்ப என்னென்ன பயிா் நடவு செய்ய வேண்டும் என்று விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தவும் வேண்டும்.
கரும்பு விவசாயிகளின் நலன்கருதி ஆம்பூா் சா்க்கரை ஆலை இயந்திரங்களை புதுப்பித்து, ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் கால்நடைகள் வாங்க வட்டியில்லா கடனுதவி செய்திட வேண்டும்.
மாம்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில், அவற்றை உடலுக்கு தீங்கு விளைவிக்கும் காா்பைடு கற்கள் வைத்து பழுக்க வைப்பதை தடுக்க உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாதனூரில் தோல் தொழிற்சாலை கழிவுகள் கலப்பதால் ஆற்றில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து மிதக்கின்றன. அதனால், குடிநீா் மாசுபடுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
குறைகள், கோரிக்கைகளைக் கேட்டறிந்த மாவட்ட வருவாய் அலுவலா், விவசாயிகளின் பிரச்னைகளை தீா்க்க துறை அலுவலா்கள் விரைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டாா்.
கூட்டத்தில், மாவட்ட வனஅலுவலா் கலாநிதி, வேளாண்மை இணை இயக்குநா் ஸ்டீபன்ஜெயக்குமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) வெங்கடேசன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் நந்தகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.