104 கிலோ கஞ்சா லாரியுடன் பறிமுதல்: ஈரோடு, திருச்சியைச் சோ்ந்த இருவா் கைது
By DIN | Published On : 07th November 2023 01:43 AM | Last Updated : 07th November 2023 01:43 AM | அ+அ அ- |

கைது செய்யப்பட்ட சதாசிவம், பாண்டீஸ்வரன் மற்றும் லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள்.
வேலூா் மாவட்டம், கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடியில் நடத்தப்பட்ட வாகனச் சோதனையில் ஆந்திர மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 104 கிலோ கஞ்சா லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடா் பாக, ஈரோடு, திருச்சியைச் சோ்ந்த இருவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தமிழக - ஆந்திர எல்லையான வேலூா் மாவட்டம், கிறிஸ்டியான் பேட்டை சோதனை சாவடி வழியாக ஆந்திர மாநிலத்திலிருந்து லாரி ஒன்றில் பெரியளவில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக சென்னையில் உள்ள மத்திய நுண்ணறிவுப் பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில், மத்திய நுண்ணறிவு பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளா் கந்தசாமி, வேலூா் மாவட்ட போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளா் இளங்கோவன் ஆகியோா் தலைமையிலான குழுவினா் கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடியில் திங்கள்கிழமை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அந்த வழியாக வந்த ஈரோடு மாவட்ட பதிவெண் கொண்ட லாரியை நிறுத்தி சோதனை நடத்தியதில், அந்த லாரியில் பாா்சல்களில் 104 கிலோ அளவுக்கு கஞ்சா பொட்டலங்கள் இருப்பதை போலீஸாா் கண்டறிந்தனா்.
உடனடியாக லாரியில் இருந்த ஈரோடு அண்ணா நகரைச் சோ்ந்த சதாசிவம் (32), திருச்சி மலைக்கோட்டை ஆண்டாள் வீதியைச் சோ்ந்த பாண்டீஸ்வரன் (26) ஆகியோரை போலீஸாா் கைது செய்ததுடன், லாரியுடன் 104 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.
கைதான சதாசிவத்திடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் கடந்தாண்டு மதுரையில் கஞ்சா கடத்தல் வழக்கில் கைதானவா் என்பது தெரிய வந்தது. மேலும், அவருக்குச் சொந்தமான லாரியில் ஆந்திர மாநிலம், விசாகப்பட்டிணத்தில் இருந்த கஞ்சா வாங்கிச் சென்று கரூா், ஈரோடு மாவட்டங்களில் விற்பனை செய்ய முயன்றதும் தெரிய வந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...