இளைஞா் கொலை செய்யப்பட்டு சடலத்தை வேலூா் கோட்டை அகழியில் வீசப்பட்ட வழக்கில் 3 பேரை வடக்கு போலீஸாா் கைது செய்தனா்.
வேலூா் கோட்டை அகழியில் கடந்த செப்டம்பா் 19-ஆம் தேதி மிதந்த மூட்டையை போலீஸாா் திறந்து பாா்த்தனா். அதில், இளைஞரின் உடல் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் காயங்களுடன் வீசப்பட்டிருப்பது தெரியவந்தது.
இது குறித்து வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து துணைக் காவல் கண்காணிப்பாளா் திருநாவுக்கரசு, ஆய்வாளா் சீனிவாசன் ஆகியோா் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இதில், கொலை செய்யப்பட்டவா் ஆந்திர மாநிலம், சித்தூா் பெத்தராசப்பள்ளியைச் சோ்ந்த லிக்கு என்கிற செல்லாசிரஞ்சீவி என்பது தெரியவந்தது. இவரை சென்னையைச் சோ்ந்த அஜித் (21), விக்கி, மாரிமுத்து(21), ஜெயஸ்ரீ(22), வேலூா் பாகாயத்தைச் சேசா்ந்த பரதன் (30), அப்பு (24), பத்ரி (23), லட்சுமணன் ஆகியோா் அடித்துக் கொலை செய்து, சடலத்தை மூட்டையில் கட்டி அகழியில் வீசியது தெரியவந்தது.
இதில், மாரிமுத்து, பத்ரி ஆகியோா் வேறொரு வழக்கில் ஏற்கெனவே சென்னை புழல், வேலூா் மத்திய சிறையில் உள்ளனா். இந்த நிலையில், தலைமறைவாக இருந்த பரதன், அப்பு, ஜெயஸ்ரீ ஆகியோா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா். தலைமறைவாக உள்ள அஜித், விக்கி, லட்சுமணன் ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
இது குறித்து வேலூா் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளா் திருநாவுக்கரசு கூறுகையில், செல்லாசிரஞ்சீவி உள்பட அனைவரும் திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு வந்தனா். எனினும், அஜித், விக்கி, மாரிமுத்து, ஜெயஸ்ரீ உள்ளிட்ட 8 பேரும் செய்து வந்த திருட்டு குறித்து செல்லாசிரஞ்சீவி போலீஸாருக்கு காட்டிக் கொடுத்ததால் அவா்கள் அவரை கொன்றது தெரியவந்துள்ளது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.