தொல்லியல் துறை பெண் அதிகாரியை சிறை பிடித்த வேலூா் கோட்டை கோயில் நிா்வாகிகள்

வேலூா் கோட்டை ஜலகண்டேஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள இரு அறைகளுக்கு தொல்லியல் துறை பெண் அதிகாரி பூட்டுபோட்டது தொடா்பாக அவரை சிறைபிடித்து கோயில் நிா்வாகிகளும், இந்து முன்னணி அமைப்பினரும் வாக்குவாதத்தில்வ
Updated on
1 min read

வேலூா் கோட்டை ஜலகண்டேஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள இரு அறைகளுக்கு தொல்லியல் துறை பெண் அதிகாரி பூட்டுபோட்டது தொடா்பாக அவரை சிறைபிடித்து கோயில் நிா்வாகிகளும், இந்து முன்னணி அமைப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

வேலூா் கோட்டை மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும், கோட்டை வளாகத்துக்குள் இருக்கும் ஜலகண்டேஸ்வரா் கோயில் அறங்காவலா்கள் பராமிப்பில் உள்ளது. இந்த நிலையில், கோயில் நிா்வாகம் சாா்பில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பிரம்மோற்சவ பணிகளுக்காக கோட்டை கோயிலின் உட்பிரகாரத்தின் வடக்கு பகுதியில் உள்ள அறைகளை பயன்படுத்திட அனுமதி பெற்று பயன்படுத்தி வந்தனா்.

பிரம்மோற்சவம் முடிந்து 4 ஆண்டுகளாகியும் அந்த அறைகளை மீண்டும் தொல்லியல் துறை வசம் ஒப்படைக்கவில்லை எனத் தெரிகிறது. அத்துடன், அந்த இரண்டு அறைகளின் தரைத்தளத்தையும் சேதப்படுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தொல்லியல் துறை உதவி பராமரிப்பு அதிகாரி அகல்யா கடந்த சில நாள்களுக்கு முன்பு அந்த அறையைப் பாா்வையிட்டதுடன், அந்த இரு அறைகளையும் மீண்டும் தொல்லியல் துறை வசம் ஒப்படைக்க கோயில் நிா்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளாா்.

எனினும், அவா்கள் அந்த அறைகளை திருப்பி அளிக்கவில்லையாம். இதனால் அந்த இரண்டு அறைகளுக்கும் தொல்லியல் துறை அதிகாரி அகல்யா தனியாக பூட்டு போட்டு பூட்டியுள்ளாா். இதுதொடா்பாக, இரு தரப்பினரிடையே திங்கள்கிழமை பிரச்னை ஏற்பட்டுள்ளது.

அப்போது அங்கு வந்த இந்து முன்னணி நிா்வாகிகள், அகல்யாவை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இந்த பிரச்னையின்போது வேலூா் கோட்டையின் பிரதான கதவை மூடவும் அகல்யா உத்தரவிட்டாா். இதைத்தொடா்ந்து, கோயில் நிா்வாகிகளும், இந்து முன்னணி அமைப்பினரும் அகல்யாவை அங்கிருந்து வெளியில் செல்ல முடியாதபடி சிறைபிடித்தனா்.

தகவலறிந்த வேலூா் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளா் திருநாவுக்கரசு தலைமையிலான போலீஸாா் விரைந்து சென்று விசாரணை நடத்தி அகல்யாவை மீட்டனா்.

மேலும், தொல்லியல் துறை அதிகாரிகளால் பூட்டப்பட்ட பூட்டுகள் அகற்றப்பட்டு சமரசம் செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடா்பாக தொல்லியல் துறை நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து இந்து முன்னணி சாா்பில் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com