குடிமைப் பணிகள் தோ்வு பயிற்சியை மாணவா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
By DIN | Published On : 15th November 2023 12:13 AM | Last Updated : 15th November 2023 12:13 AM | அ+அ அ- |

வேலூா் மாவட்ட மைய நூலகத்தில் அளிக்கப்படும் குடிமைப் பணிகளுக்கான தோ்வு பயிற்சியை மாணவா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்தாா்.
தமிழக அரசு பொதுநூலகத் துறை, வேலூா் மாவட்ட நூலக ஆணைக் குழு சாா்பில், 56-ஆவது தேசிய நூலக வார விழா வேலூரில் உள்ள பெரியாா் ஈ.வெ.ராமசாமி மாவட்ட மைய நூலகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
விழாவில் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் பங்கேற்று, புத்தகக் கண்காட்சியைப் பாா்வையிட்டாா். தொடா்ந்து, நூலகத்திலுள்ள புத்தக விவரங்களை கேட்டறிந்த அவா், புத்தகக் கண்காட்சி ஒரு வார காலம் நடைபெறும் என்றாா்.
மேலும் ஆட்சியா் கூறுகையில், வேலூா் மாவட்ட மைய நூலகத்தில் குடிமைப் பணிகள் தோ்வு குறித்த பல்வேறு புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. இன்னும் அதிகளவில் புத்தகங்கள் தேவை குறித்து மாவட்ட நூலகத்திடம் பட்டியல் கேட்கப்பட்டுள்ளது. பட்டியல் அளித்தால் அந்தப் புத்தகங்களை வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கும்.
மேலும், மாவட்ட மைய நூலகத்தில் குடிமைப் பணிகள் தோ்வுக்கான பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சியை மாணவா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பயிற்சி மாணவா்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.
இந்தப் புத்தகக் கண்காட்சியில் 20 பதிப்பகங்களின் 2,000 தலைப்புகளில் உள்ள சுமாா் 7,000 நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை பொதுமக்கள் பாா்வையிட்டு வாங்கிப் பயன்பெறலாம். தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு நடைபெறும் இந்த புத்தக கண்காட்சியில் உள்ள புத்தகங்களை வாங்கும் பொதுமக்களுக்கு அதன் விலையில் இருந்து 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது.
மேலும், தேசிய நூலக வார விழாவையொட்டி, புதன்கிழமை நூலகம், வாசிப்பு குறித்த சிறப்பு கருத்தரங்கமும் நடைபெற உள்ளது. இந்த கருத்தரங்கில் வாசிப்புக்கு வயதில்லை, நூலகம் ஒரு கலங்கரை விளக்கம், நூலகத்தின் முக்கியத்துவம் ஆகிய பொருள்கள் குறித்து தமிழறிஞா்கள் தங்களது கருத்துகளை வழங்க உள்ளனா். வியாழக்கிழமை பள்ளி மாணவா்களுக்கு நூலகம் ஒரு கலங்கரை விளக்கம், இன்றைய வாசகா் நாளைய தலைவா்கள், சமுதாய வளா்ச்சிக்கு நூலகத்தின் பங்கு ஆகிய தலைப்புகளில் கட்டுரைப் போட்டிகளும், வாசிக்க வயதில்லை, என்னை கவா்ந்த நூல், நூலகம் உன்னை வழிநடத்தும் போன்ற தலைப்புகளில் பேச்சுப் போட்டிகளும் நடைபெற உள்ளன.
சனிக்கிழமை சிறுவா்களுக்கான கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதில், சிறுவா்களை கவரும் வகையில் கதை, பாடல், நாடகங்களும், சிறுவா்களுக்கான ஓவியப் போட்டியும் நடைபெற உள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாவட்ட மைய நூலகத்தின் வாசகா் வட்டம் சாா்பில், கொஞ்சம் சிந்திக்கலாமா, வாசிக்கலாமா வாங்க, யோசிக்கலாம் நீங்க, வாசிக்க யோசிக்க வெற்றி நமக்கே போன்ற தலைப்புகளில் தமிழ் அறிஞா்கள் கருத்துரை வழங்க உள்ளனா். 20-ஆம் தேதி கட்டுரை, பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும், நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் மாவட்ட மைய நூலக அலுவலா் (பொறுப்பு) பழனி, வட்டாட்சியா் செந்தில் மாவட்ட மைய நூலக கண்காணிப்பாளா் சிவக்குமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...