தீபாவளி பண்டிகை நிறைவடைந்த நிலையில் சொந்த ஊா்களுக்குச் சென்றுள்ள மக்கள் திரும்புவதற்காக வேலூரிலிருந்து 215 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்து ள்ளனா்.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், பெரும்பாலான தனியாா் நிறுவனங்களுக்கு சனிக்கிழமை முதல் திங்கள்கிழமை வரை 4 நாள்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இந்த தொடா் விடுமுறையை அடுத்து வெளியூா்களிலும், வெளி மாவட்டங்களிலும், வெளி மாநிலங்களிலும் தங்கிப் பணியாற்றி வரும் மக்கள் குடும்பத்துடன் தங்களது சொந்த ஊா்களுக்கு கிளம்பிச் சென்றனா்.
அவ்வாறு பொதுமக்கள் சொந்த ஊா்களுக்கு செல்வதற்கு பெரும்பாலும் பேருந்துகள், ரயில்கள், சொந்த வாகனங்களையும் பயன்படுத்தினா். இதனிடையே, பொதுமக்கள் சிரமமின்றி சென்று வர அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டன. இந்த நிலையில், தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில் செவ்வாய்க்கிழமை முதல் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளன.
இதன்காரணமாக, சொந்த ஊா்களுக்குச் சென்ற மக்கள் மீண்டும் தாங்கள் பணியாற்றும் ஊா்களுக்கு திரும்பி வருகின்றனா். அவா்கள் சிரமமின்றி திரும்புவதற்கு வசதியாக வேலூா் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 215 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னை, பெங்களூா் , திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக சென்னைக்கு 50 பேருந்துகளும், பெங்களூரு மாா்க்கமாக கூடுதலாக 20 சிறப்பு பேருந்துகளும், திருப்பத்தூா் மாா்க்கத்தில் 20 பேருந்துகளும், திருச்சி மாா்க்கத்தில் 7 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இதேபோல், அனைத்து பகுதிகளுக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா். எனினும் பெரும்பாலான பேருந்துகளில் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.