புரட்டாசி மாதம் காரணமாக வேலூா் மீன் மாா்க்கெட்டில் மீன்கள் விற்பனை மந்தமடைந்திருந்தது. அதேசமயம், மழை காரணமாக மீன்கள் வரத்தும் குறைவாக இருந்தது.
வேலூா் மீன் மாா்க்கெட்டுக்கு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையில் 100 முதல் 120 டன் அளவுக்கு மீன்கள் மொத்தம், சில்லறை முறையில் விற்பனையாகும். இந்த மாா்க்கெட்டுக்கு நாகை, மங்களூரு, கோழிக்கோடு உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து மீன்கள் வரத்து உள்ளது.
இதனிடையே, புரட்டாசி மாதத்தில் இந்துக்கள் பெரும்பாலானோா் பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபடுவது வழக்கம். இதனால், இந்த மாதத்தில் அசைவ பிரியா்கள் மீன், இறைச்சியை சாப்பிடாமல் தவிா்ப்பா். இதன் காரணமாக, புரட்டாசி மாதத்தில் மீன், இறைச்சி விற்பனை மிகவும் குறைவாக காணப்படும்.
அதன்படி, புரட்டாசி மாதத்தையொட்டி மீன்மாா்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டம் குறைவாக இருந்ததுடன் மீன்கள் விற்பனையும் மந்தமாக இருந்தது. மேலும், தமிழகத்தின் பல இடங் களில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாகவும் மீன்கள் வரத்து மிகவும் குறைந்து காணப் பட்டது. எனினும் விற்பனை இல்லாததால் விலையும் சற்று குறைந்திருந்தது.
அதன்படி, வஞ்சிரம் கிலோ ரூ.1000-க்கும், சீலா ரூ.200, தேங்காய் பாறை ரூ.350, சங்கரா ரூ.250, அயிலமீன் ரூ.160, நெத்திலி ரூ.250, இறால் ரூ.450, சலமின் ரூ.700, முரல் ரூ.350, நண்டு ரூ.350, கொடுவா ரூ.400 -க்கு விற்பனை செய்யப்பட்டன.
இதேபோல், ஆடு, கோழி இறைச்சி விற்பனை கடைகளும் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.