திருக்குறளை உலகப் பொது நூலாக அறிவிக்க ஐ.நா.சபைக்கு பரிந்துரைக்க வேண்டும்
By DIN | Published On : 25th October 2023 12:00 AM | Last Updated : 25th October 2023 12:00 AM | அ+அ அ- |

வேலூா்: திருக்குறளை உலகப் பொது நூலாக அறிவிக்க ஐக்கிய நாடுகள் சபையின் கவனத்துக்கு மத்திய, மாநில அரசுகள் கொண்டு செல்ல வேண்டும் என்று உலக திருக்கு கூட்டமைப்பின் வேலூா் மண்டலக் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
உலகத் திருக்கு கூட்டமைப்பின் வேலூா் மண்டலக் கூட்டம் வேலூா் விருதம்பட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வேலூா் - காஞ்சிபுரம் மண்டலத் தலைவா் செ.நா.ஜனாா்த்தனன் தலைமை வகித்தாா். முன்னதாக தலைமை ஒருங்கிணைப்பாளா் கணேசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். கு ஆா்வலா் வீரா.குமரன் வரவேற்றாா்.
பொதுச் செயலா் தங்க.ஆதிலிங்கம் திருக்கு நெறிக் கரண ஆசான்கள் பயிற்சி குறித்து விளக்கினாா். அறக்கட்டளை தலைவா் தா.சம்பத் அறக்கட்டளை புரவலா்கள் சோ்ப்பது குறித்துப் பேசினாா்.
கூட்டத்தில், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு தமிழக அரசு சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றிட வேண்டும். மேலும், திருக்குறளை உலகப் பொது நூலாக அறிவிக்க ஐக்கிய நாடுகள் சபையின் கவனத்துக்கு மத்திய, மாநில அரசுகள் கொண்டு செல்ல வேண்டும்.
தமிழா்களின் இல்லங்களில் திருமண விழா, காதணி விழா, புதுமனை புகுவிழா உள்ளிட்ட அனைத்து குடும்ப நிகழ்வுகளையும் தாய் தமிழ் மொழியில் தமிழாசான்கள் மூலம் திருக்கு நெறிப்படி நடத்திட வேண்டும். இதற்காக தமிழகத்தில் ஒரு மாவட்டத்துக்கு 40 போ் என 1,330 பேருக்கு திருக்கு நெறிக்கரணஆசான் பயிற்சி வழங்குவது என உலகத் திருக்கு கூட்டமைப்பு எடுத்துவரும் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதெனவும், 2024 மே 15, 16 ஆகிய தேதிகளில் மதுரையில் நடைபெறும் உலகத் திருக்கு மாநாட்டில் பயிற்சி பெற்ற 1,330 திருக்கு நெறிக்கரண ஆசான்களுக்கான அரங்கேற்ற விழா, பட்டமளிப்பு விழாவில் வேலூா்-காஞ்சிபுரம் மண்டலங்கள் சாா்பில் ஒரு மாவட்டத்துக்கு தலா 40 போ் வீதம் 220 கரண ஆசான்களை அனுப்பி வைப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடா்ந்து, உலகத் திருக்கு கூட்டமைப்பு நிா்வாகிகள் அறிவிக்கப்பட்டனா். அதன்படி, வேலூா்-திருப்பத்தூா் மண்டலத் தலைவராக செ.நா.ஜனாா்த்தனன், ராணிப்பேட்டை -காஞ்சிபுரம் மண்டலத் தலைவராக சரண்யா, தலைமை ஒருங்கிணைப்பாளராக மருத்துவா் கணேசன், வேலூா் மாவட்ட தலைவராக வீரா. குமரன் உள்ளிட்டோா் அறிவிக்கப்பட்டனா். கு ஆா்வலா் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...