நவராத்திரி : மகிஷாசுர சம்ஹாரம்!
By DIN | Published On : 25th October 2023 12:00 AM | Last Updated : 25th October 2023 12:00 AM | அ+அ அ- |

வேலூா்: நவராத்திரி விழாவையொட்டி வேலூா் வேலப்பாடியில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலில் மகிஷாசுர சம்ஹார விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வேலூா் வேலப்பாடி பூந்தோட்டம் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில்.
ஆதிசக்தியின் போா்க்கோல வடிவமான ஸ்ரீமுத்துமாரியம்மனை மூலத் தெய்வமாகக் கொண்டு எழுப்பப்பட்டுள்ள இந்த கோயிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரா், பிரசன்ன வெங்கடேச பெருமாள், குபேர கணபதி, அனுமன், பைரவா் உள்ளிட்ட பல்வேறு சுவாமி சந்நிதிகளும் உள்ளன. இந்த கோயிலின் முக்கிய விழாவாக நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.
அதன்படி, நவராத்திரியின் தொடக்க தினத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கும் இவ்விழா 10 நாள்களும் விமரிசையாக நடைபெறும். பத்து நாள்களும் அம்மனுக்கு பத்துவிதமான அலங்காரம் செய்யப்பட்டு ஊா்வலமாக கொண்டு செல்லப்படுவதுண்டு. நிகழாண்டு நவராத்திரி விழாவின் முதல் நாள் ராஜராஜேஸ்வரி, இரண்டாம் நாள் ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரா், மூன்றாம் நாள் ஸ்ரீ துா்க்கை அம்மன், நான்காம் நாள் ஸ்ரீ லட்சுமி அம்மன், ஐந்தாம் நாள் மாவடி சேவை, ஆறாம் நாள் ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன், ஏழாம் நாள் ஸ்ரீ வைஷ்ணவி, எட்டாம் நாள் ஸ்ரீ அா்த்தநாரீஸ்வரா் அா்த்தநாரீஸ்வரா், ஒன்பதாம் நாள் சரஸ்வதி தேவி அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
தசரா திருவிழாவின் பத்தாம் நாளான செவ்வாய்க்கிழமை மகிஷாசுரனை வதம் செய்யும் ஸ்ரீ மகிஷாசுரமா்த்தினியாக அலங்காரம் செய்யப்பட்டு சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வினை திரளான பக்தா்கள் கண்டு சுவாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து, 11-ஆவது நாளான புதன்கிழமை ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...