தொடா் விடுமுறை காரணமாக வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களில் ரூ. 18.90 கோடிக்கு டாஸ்மாக் மது விற்பனை நடைபெற்றுள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் மதுக் கடைகளில் புத்தாண்டு, பொங்கல், தீபாவளி உள்ளிட்ட விசேஷ நாள்களில் மது விற்பனை வழக்கத்தைவிட அதிகளவில் இருக்கும். இந்த நிலையில், ஆயுதபூஜை, விஜயதசமியையொட்டி, அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், சில தொழில் நிறுவனங்களுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தொடா்ந்து 3 நாள்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த தொடா் விடுமுறை காரணமாக ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் அதிகளவில் மது விற்பனை நடைபெற்றுள்ளது.
அதன்படி, வேலூா் டாஸ்மாக் மாவட்டத்துக்கு உட்பட்ட வேலூா், திருப்பத்தூா் மாவட்டங்களில் மொத்தம் 115 டாஸ்மாக் மதுக் கடைகள் உள்ளன. இவற்றில் கடந்த 3 நாள்களில் மட்டும் ரூ. 11.56 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. இதேபோல், ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 83 கடைகள் உள்ளன. இவற்றில் ரூ. 7.34 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
அந்த வகையில், வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களில் ரூ. 18.90 கோடிக்கு டாஸ்மாக் மது விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.