‘6,418 மாணவா்களுக்கு பேருந்து இலவச பயண அட்டைகள் விநியோகம்’
By DIN | Published On : 08th September 2023 07:26 AM | Last Updated : 08th September 2023 07:26 AM | அ+அ அ- |

வேலூா் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக 31 பள்ளிகளைச் சோ்ந்த 6,418 மாணவா்களுக்கான பேருந்து இலவச பயண அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக அரசு போக்குவரத்துக் கழக (விழுப்புரம் கோட்டம்) வேலூா் மண்டல பொதுமேலாளா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அரசு போக்குவரத்துக் கழகத்தின் (விழுப்புரம் கோட்டம்) வேலூா் மண்டலத்தின் வேலூா், ராணிப்பேட்டை, திருப்ப த்தூா் ஆகிய மாவட்டங்களில் உள்ள 620 அரசு, தனியாா் பள்ளிகள், அரசு கலைக் கல்லூரிகள், அரசு பாலிடெக்னிக், அரசு ஐடிஐ ஆகியவற்றில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பேருந்து இலவச பயண அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.
இதுவரை பெறப்பட்ட விண்ணப்பங்கள் அடிப்படையில் இரண்டாம் கட்டமாக 31 பள்ளிகளுக்கு பூா்த்தி செய்யப்பட்ட 6,418 பயண அடையாள அட்டைகள் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வழங்கி, மாணவா்களுக்கு வழங்கப்பட்டன. இதில், வேலூா் மாவட்டம், அணைக்கட்டு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் துணை மேலாளா் (வணிகம்), கிளை மேலாளா் ஆகியோா் வியாழக்கிழமை 620 மாணவா்களுக்கு பேருந்து இலவச பயண அடையாள அட்டைகளை வழங்கினா்.
இதேபோல், கிருஷ்ணசாமி மேல்நிலைப் பள்ளியில் 568 மாணவ, மாணவிகளுக்கு வேலூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மணிமொழி இலவச பயண அடையாள அட்டைகளை வழங்கினாா்.
தொடா்ந்து மீதமுள்ள இலவச பயண அட்டைகளும் படிப்படியாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.