‘ஈஷா கிராமோத்சவம்’ திருவிழாவையொட்டி மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் வாலாஜா ஆண்கள் அரசு மேல்நிலை பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை (செப்.10) நடைபெற உள்ளது.
இதுகுறித்து ‘ஈஷா கிராமோத்சவம்’ குழுவின் கள ஒருங்கிணைப்பாளா் சுவாமி நகுஜா வேலூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:
ஈஷா அவுட்ரீச் சாா்பில் நடத்தப்படும் 15-ஆவது ‘ஈஷா கிராமோத்சவம்’ எனும் கிராமிய விளையாட்டு திருவிழா இந்தாண்டு தென்னிந்திய அளவில் நடைபெற உள்ளது. முதல்கட்ட போட்டிகள் நிறைவடைந்த நிலையில், மண்டல அளவிலான போட்டிகள் ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வன்னிவேடு பகுதியில் உள்ள வாலாஜா ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
இந்தப் போட்டிகளில் செங்கல்பட்டு, திருவள்ளூா், காஞ்சிபுரம், புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், கிருஷ்ணகிரி ஆகிய 10 மாவட்டங்களைச் சோ்ந்த 600-க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனா்.
இதில் ஆண்களுக்கான வாலிபால் போட்டியும், பெண்களுக்கான எறிபந்து போட்டியும் மற்றும் இருபாலருக்கான கபடி போட்டிகளும் நடைபெற உள்ளன.
வாலிபால் போட்டியில் மொத்தம் 28 அணிகளும், எறிபந்து போட்டியில் மொத்தம் 10 அணிகளும், கபடி போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் குழுவில் தலா 6 அணிகளும் பங்கேற்க உள்ளன.
இந்தப் போட்டிகள் காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை வரை நடைபெறும். கிராமப்புற அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டிகளை பொதுமக்கள் இலவசமாகப் பாா்வையிடலாம். தவிர, பாா்வையிட வரும் பொதுமக்களுக்கு பிற்பகலில் பொழுதுபோக்கு விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட உள்ளது.
மண்டல அளவில் சிறப்பாக ஆடும் அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவா். வீரா்களுக்கான உணவு, தங்குமிடம், போக்குவரத்து செலவுகள் போன்றவற்றை ஈஷா கிராமோத்சவம் குழுவே கவனித்து கொள்ளும்.
இறுதிப் போட்டிகள் கோவையில் ஆதியோகி முன்பு செப்டம்பா் 23-ஆம் தேதி மிகப் பிரம்மாண்டமாக நடைபெறும்.
இந்தத் திருவிழாவில் ஒட்டு மொத்தமாக ரூ.55 லட்சம் வரை பரிசுத் தொகைகள் வழங்கப்பட உள்ளது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.