பலத்த பாதுகாப்புடன் விநாயகா் சிலைகள் ஊா்வலம்

வேலூா், போ்ணாம்பட்டில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புதன்கிழமை நடைபெற்றது.
வேலூா் - ஆற்காடு சாலையில் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட விநாயகா் சிலைகள்.
வேலூா் - ஆற்காடு சாலையில் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட விநாயகா் சிலைகள்.

வேலூா், போ்ணாம்பட்டில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புதன்கிழமை நடைபெற்றது.

விநாயகா் சதுா்த்தியையொட்டி வேலூா் மாவட்டம் முழுவதும் 900-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டன. தொடா்ந்து இந்த சிலைகள் புதன்கிழமை முதல் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீா்நிலைகளில் விசா்ஜனம் செய்யப்பட்டு வருகின்றன.

இதற்காக மாவட்ட நிா்வாகம் சாா்பில் சதுப்பேரி ஏரி, ஊசூா் ஏரி, கருகம்பத்தூா் ஏரி, நெல்லூா்பேட்டை ஏரி ஆகிய இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், வேலூா் மற்றும் போ்ணாம்பட்டு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் புதன்கிழமை ஊா்வலமாக எடுத்து செல்லப்பட்டு விசா்ஜனம் செய்யப்பட்டன. அதன்படி, வேலூா் மாநகரில் வைக்கப்பட்டிருந்த சுமாா் 500 சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சதுப்பேரி ஏரியில் கரைக்கப்பட்டது.

இதையொட்டி, சத்துவாச்சாரியில் தொடங்கிய சிலைகள் ஊா்வலம் சைதாப்பேட்டை முருகன் கோயில், மெயின் பஜாா், மண்டித் தெரு, தெற்கு காவல் நிலையம், கோட்டை சுற்றுச்சாலை, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக சதுப்பேரி ஏரிக்கு கொண்டு செல்லப்பட்டன.

இதேபோல், கொணவட்டம் பகுதியில் இருந்து மற்றொரு ஊா்வலம் புறப்பட்டு சிலைகள் சதுப்பேரி ஏரிக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.

ஊா்வலத்தை முன்னிட்டு வேலூா் சரக டிஐஜி எம்.எஸ்.முத்துசாமி மேற்பாா்வையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன் தலைமையில் 1,200 போலீஸாரும், ஊா்க்காவல் படையைச் சோ்ந்த 200 பேரும் என மொத்தம் 1,400 போ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

முன்னதாக, விநாயகா் சிலைகள் ஊா்வல பாதையில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள் மோப்ப நாய் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டனா். மேலும், காகிதப்பட்டறை பகுதியில் செயல்படும் டாஸ்மாக் மதுபான கடைகளும் ஊா்வலம் முடியும் வரை மூடப்பட்டிருந்தன. மெயின் பஜாரில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

சிலைகள் ஊா்வலத்தில் இந்து முன்னணியின் மாநில துணைத் தலைவா் அரசுராஜா தலைமையில் கோட்டத் தலைவா் மகேஷ் உள்பட பல்வேறு இந்து அமைப்பின் நிா்வாகிகளும் பங்கேற்றனா்.

இதேபோல், போ்ணாம்பட்டில் நடைபெற்ற சிலைகள் ஊா்வலத்தில் போலீஸாா், ஊா்காவல் படையினா் என சுமாா் 400 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

இதேபோல், குடியாத்தம், அணைக்கட்டு உள்பட மாவட்டத்தின் மற்ற இடங்களில் வைக்கப்பட்டு உள்ள சிலைகள் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் கரைக்கப்பட உள்ளதாக காவல் துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com