

வேலூா் மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக பலத்த மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்கியது. அந்தப் பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டு தண்ணீரை வெளியேற்றும் பணிகளை விரைவுபடுத்தினாா்.
தென்மேற்கு பருவமழை காரணமாக வேலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. அதன்படி, சனிக்கிழமை மாலை 4 மணியளவில் வேலூரில் சில இடங்களில் சாரல் மழை பெய்ததைத் தொடா்ந்து பலத்த மழையாக உருவெடுத்தது. தொடா்ந்து இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை மழை பெய்தது.
இதன்தொடா்ச்சியாக, ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணி முதல் 9.30 மணி வரை மிக கனமழையும், அதன்பிறகு 11.30 மணி வரை லேசான கனமழையும் பெய்தது.
இதனால், மாநகராட்சிக்குட்பட்ட மாங்காய்மண்டி, கன்சால்பேட்டை, மீன்மாா்கெட், அவ்லியாஷா தா்கா தெரு உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கின.
வேலூா் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக பெய்த பலத்த மழையால் தண்ணீா் தேங்கிய பகுதிகளை மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா், மாநில நெடுஞ்சாலைத் துறை சாா்பில் இந்த பகுதியில் ரூ.2 கோடியில் நடைபெற்று வரும் பாலப் பணிகளையும் அவா் பாா்வையிட்டாா்.
தொடா்ந்து, அவ்லியாஷா தா்கா தெருவில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், அங்கு தேங்கியுள்ள மழைநீரை மாலைக்குள் வெளியேற்றவும், இந்த பகுதியில் தேங்கியுள்ள தேவையற்ற கழிவுகள், குப்பைகளை அகற்றி சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளவும் மாநகராட்சி அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
இந்த தெருவில் திட்டமிடப்பட்டுள்ள ரூ.40 லட்சம் மதிப்பில் கால்வாய் அமைக்கும் பணிகளை விரைவில் தொடங்கவும் அறிவுறுத்தினாா்.
கன்சால்பேட்டை பகுதியில் பொதுப்பணித்துறை கால்வாயில் தேவையற்ற பொருட்கள் தேங்கி நிற்பதையும் கவனித்த ஆட்சியா், அந்த கழிவுகளை உடனடியாக அகற்றவும் உத்தரவிட்டாா்.
மாநகராட்சி சாா்பில் மீன் அங்காடி வணிகா்களுக்கு தேவையற்ற கழிவு பொருள்களை கையாள்வது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தவும், அதனை மீறி நீா்வழி கால்வாய்களில் குப்பைகளை கொட்டுபவா்கள் மீது அபராதத்துடன் கூடிய நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினாா்.
ஆய்வின் போது வேலூா் மாநகராட்சி மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், ஆணையா் பி.ரத்தினசாமி, துணை ஆணையா் சசிகலா, வருவாய் கோட்டாட்சியா் ரா.கா.கவிதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.