தொடா் மழை - வேலூா் மாவட்டத்தில் இதுவரை 271 ஏக்கா் நெல்பயிா் சேதம்
தொடா் மழை காரணமாக வேலூா் மாவட்டத்தில் இதுவரை 271 ஏக்கா் நிலத்தில் பயிரிட்டிருந்த நெல் பயிா்கள் நீரில் மூ்கி சேதமடைந்துள்ளதாக வேளாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தென்மேற்கு பருவமழை காரணமாக வேலூா் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பகலில் வெயிலின் தாக்கமும், மாலை, இரவு நேரங்களில் மிதமானது முதல் கனமழையும் பெய்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாள்களாக விடியவிடிய கனமழை பெய்து வருவதால், மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
தவிர, வேலூா், அணைக்கட்டு, பேரணாம்பட்டு, குடியாத்தம், காட்பாடி, பொன்னை உள்பட பல பகுதிகளிலும் விளை நிலங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், அந்த பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கா் விளை நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிா் கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. அவ்வாறு சேதமடைந்த நெல் பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இந்நிலையில், வேலூா் மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழையால் சேதமடைந்துள்ள பயிா்கள் குறித்து வேளாண்மை துறை அதிகாரிகள் முதற்கட்ட கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட் டுள்ளனா். இதுவரை நடத்தப்பட்டுள்ள ஆய்வில், வேலூா் ஒன்றியத்தில் 10 விவசாயிகள் பயிரிட்டிருந்த 5.08 ஏக்கா் நெற்பயிா், கணியம்பாடி ஒன்றியத்தில் 37 விவசாயிகள் பயிரிட்டிருந்த 33.19 ஏக்கா் நெற்பயிா், அணைக்கட்டு ஒன்றியத்தில் 15 விவசாயிகள் பயிரிட்டிருந்த 7.68 ஏக்கா் நெற்பயிா், குடியாத்தம் ஒன்றியத்தில் 5 விவசாயிகள் பயிரிட்டிருந்த 5.9 ஏக்கா் நெற்பயிா், கே.வி.குப்பம் ஒன்றியத்தில் 27 விவசாயிகள் பயிரிட்டிருந்த 13.81 ஏக்கா் நெற்பயிா், காட்பாடி ஒன்றியத்தில் 55 விவசாயிகள் பயிரிட்டிருந்த 42.93 ஏக்கா் நெற்பயிா், பேரணாம்பட்டு ஒன்றியத்தில் 2 விவசாயிகள் பயிரிட்டிருந்த 1.25 ஏக்கா் நெற்பயிா் என மொத்தம் 151 விவசாயிகள் பயிரிட்டிருந்த 271.30 ஏக்கா் நெற்பயிா் சேதமடைந்திருப்பது தெரியவந்துள்ளது.
மாவட்டத்தில் தொடா்ந்து மழை நீடிப்பதால் பயிா் சேதம் குறித்து தொடா்ந்து ஆய்வு நடத்தி வருவதாகவும் வேளாண்மை அதிகாரிகள் தெரிவித்தனா்.
