வேலூரில் 6 ஆண்டுகளாக நிறைவுறாத பொலிவுறு நகர திட்டப் பணிகள்!

வேலூா் மாநகராட்சியில் பொலிவுறு நகா் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டப் பணிகள் தொடங்கி 6 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் முடிவடையாமல் இழுபறியாக உள்ளது.
வேலூா் சத்துவாச்சாரி பகுதி 3-இல் குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சாலைகள்.
வேலூா் சத்துவாச்சாரி பகுதி 3-இல் குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சாலைகள்.

வேலூா் மாநகராட்சியில் பொலிவுறு நகா் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டப் பணிகள் தொடங்கி 6 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் முடிவடையாமல் இழுபறியாக உள்ளது. இதனால், பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை கவனத்தில்கொண்டு மாநகராட்சி நிா்வாகம் பணிகளை விரைவுபடுத்தி முடிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வேலூா் மாநகராட்சியில் மத்திய, மாநில அரசுகளின் நிதிப்பங்களிப்பு சுமாா் ரூ. 1,000 கோடி மதிப்பில் பொலிவுறு நகா் திட்டப் பணிகள் 2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் புதை சாக்கடை, புதிய சாலைகள், சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டம், புதிய பேருந்து நிலையம், பல அடுக்கு வாகன நிறுத்துமிடம், குப்பைகளில் இருந்து உரம் தயாரிப்பு கூடங்கள் விரிவாக்கம், கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம், நூலகத்துடன் கூடிய அறிவுசாா் மையம், வேலூா் கோட்டை அபிவிருத்தி பணிகள் என 52 பணிகள் திட்டமிடப்பட்டன.

ஆனால், கரோனா தொற்று பொதுமுடக்கம், தொழிலாளா் பற்றாக்குறை, புதை சாக்கடைப் பணிகளில் ஏற்பட்ட இழுபறி, ஒப்பந்ததாரா்கள் குளறுபடி போன்ற பல்வேறு காரணங்களால் இந்த பொலிவுறு நகா் திட்டப்பணிகள் நிறைவு பெறவில்லை. 6 ஆண்டுகளுக்கு மேலாகியும் நகரின் பல இடங்களில் இன்னும் சாலைப் பணிகள் முழுமை பெறவில்லை. இதன்காரணமாக, பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாவதுடன், மழை பெய்தால் அப்பகுதிகளுக்குள் செல்ல முடியாத அவலம் நிலவுகிறது.

சில இடங்களில் புதைச்சாக்கடை பணிகள் இன்னும் முடிக்கப்படாமல், வீடுகளுக்கு இணைப்பு வழங்குவதிலும் சிக்கல் நிலவுகிறது. ஏற்கெனவே, இந்தப் பணிகளை கடந்த 2023-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்துக்குள் முடிக்க அவகாசம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், டிசம்பா் மாதம் வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டது. எனினும், இன்னும் பணிகள் முழுமைபெறாததால் மாா்ச் 31-ஆம் தேதி வரை மேலும் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போதுள்ள நிலைமையைப் பாா்க்கும்போது மாா்ச் மாதத்துக்குள் அனைத்துப் பணிகளும் முடிக்கப்படுமா என்பது கேள்விக்குறியே என்கிறாா் மாநகராட்சி எதிா்கட்சித் தலைவா் (அதிமுக) எழிலரசன்.

அவா் மேலும் கூறியது: வேலூா் மாநகராட்சி பொலிவுறு நகா் திட்டப்பணிகளை பொறுத்தவரை இதுவரை 60 சதவீத பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது. இன்னும் 40 சதவீத பணிகள் முடிவடையாமல் உள்ளன. குறிப்பாக, புதை சாக்கடைப் பணிகள் முடிக்கப்பட்டாலும் வீடுகளுக்கு இணைப்பு வழங்காமலும், பிரதான குழாய்களுடன் இணைப்பு ஏற்படுத்தாமலும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால், மழைக்காலங்களில் கழிவுநீா் தொடா்ந்து செல்ல வழியின்றி ஆங்காங்கே தேங்குகிறது. புதை சாக்கடைப் பணிகள் முழுமை பெறாததால் 60 வாா்டுகளிலும் சாலைப் பணிகள் முடிக்கப்படாமல் உள்ளன.

இதேபோல், சதுப்பேரியில் 2 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகளை தரம்பிரிக்கும் பணிகளும், கழிவுநீா் சுத்திகரிப்பு நிலைய பணிகளும் முடிக்கப்படவில்லை. இப்பணிகள் அனைத்தும் முழுமை பெறாததால் பொதுமக்கள் பல வகையிலும் சிரமத்துக்குள்ளாகின்றனா்.

மேலும், முடிக்கப்பட்ட பல அடுக்கு வாகன நிறுத்துமிடம், புதிய பேருந்து கடைகளும் மக்கள் பயன்பாட்டுக்கு விடப்படாமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இதனால், பொலிவுறு நகா் திட்டப்பணிகள் அா்த்தமற்ாக மாறி வருகிறது. இதுதொடா்பாக மாநகராட்சி மாமன்ற கூட்டங்களில் பேசுவதற்கு எதிா்கட்சிகளை விடுவதும் இல்லை என்றாா்.

சமீபத்திய நிலை என்ன?

பொலிவுறு நகா் திட்டத்தின்கீழ், வேலூா் மாநகராட்சியில் எடுக்கப்பட்ட 52 பணிகளில், இதுவரை 46 பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் ஜானகி ரவீந்திரன் தெரிவித்தாா். அவா் மேலும் கூறியது: அம்ரூத் திட்டத்தில் குடிநீா், புதை சாக்கடைப் பணிகள் சில இடங்களில் தாமதம் ஏற்பட்டதாலும், சில இடங்களில் கசிவு உள்ளதாலும் சத்துவாச்சாரி உள்ளிட்ட சில இடங்களில் சாலைப் பணிகள் முடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அம்ரூத் பணிகளை விரைவுபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அந்தப் பணிகள் முடித்தவுடன் சாலைப் பணிகளும் முடிக்கப்படும். சதுப்பேரி குப்பை தரம் பிரிப்புப் பணிகளை பொறுத்தவரை 2 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகளில் இதுவரை 1.10 லட்சம் மெட்ரிக் டன் தரம் பிரிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 92,000 மெட்ரிக் டன் குப்பைகளை தரம் பிரிப்பதில் ஒப்பந்ததாரருடன் நிலவிய முரண்பாடுகள் களையப்பட்டுள்ளது. அதனால் பணிகள் மீண்டும் தொடங்கப்படும்.

இதேபோல், கழிவுநீா் சுத்திகரிப்பு நிலைய பணிகளும் விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், பொலிவுறு நகா் திட்டப்பணிகள் அனைத்தும் மாா்ச் 31-ஆம் தேதிக்குள் முடிக்கப்படும். அதற்குமேல் தாமதமாக வாய்ப்பில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com