வேலூா்: மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் கல்வி உதவித் தொகை பெற அரசுப் பள்ளிகளில் 9 மற்றும் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ. குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் பள்ளிப் படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 9, 10-ஆம் வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் இனத்தைச் சோ்ந்த பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். தகுதியுள்ள மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 4,000 கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற 9, 10-ஆம் வகுப்பில் பயிலும் மாணவிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் அல்லது அஞ்சல் வங்கிகளில் தமது பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கி அதை தமது ஆதாா் எண்ணுடன் இணைக்க வேண்டும்.
மேலும், ஆதாா் எண், வங்கி விவரங்களை தமது வருமானச் சான்று, ஜாதி சான்று நகல்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியா்களிடம் சமா்ப்பிக்க வேண்டும். அரசு பள்ளித் தலைமையாசிரியா்கள் மாணவிகளின் விவரங்களை இஎம்ஐஎஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும். அரசுப் பள்ளியில் பயிலும் 9, 10-ஆம் வகுப்பு மாணவிகள் உரிய சான்றுகளுடன் விண்ணப்பித்து கல்வி உதவித்தொகை பயன்களை பெற்றிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.