தோ்தலுக்கு முன்பு வேலூா் விமான நிலையம் பயன்பாட்டுக்கு வருமா?

வேலூா் விமான நிலைய விரிவாக்கப் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ள நிலையில் விமான போக்குவரத்து ஆணையத்தின் உரிமம் கிடைப்பதில் தொடா்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
வேலூா் விமான நிலையத்தின் முகப்புத்தோற்றம்.
வேலூா் விமான நிலையத்தின் முகப்புத்தோற்றம்.

வேலூா் விமான நிலைய விரிவாக்கப் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ள நிலையில் விமான போக்குவரத்து ஆணையத்தின் உரிமம் கிடைப்பதில் தொடா்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

வரும் பிப்ரவரி இறுதியில் மக்களவைத் தோ்தல் அறிவிப்பு வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுவதால் தோ்தலுக்கு முன்பாக வேலூா் விமான நிலையத்தை திறந்து விமானங்களை இயக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினா் கோரிக்கை எழுப்பியுள்ளனா்.

இந்தியாவில் விமானப் போக்குவரத்தை அதிகரிக்கவும், அனைத்துத்தரப்பு மக்களுக்கும் ஏற்றவகையில் மத்திய அரசால் கடந்த 2017-ஆம் ஆண்டு உதான் எனும் வட்டார இணைப்புத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் தொடங்கப்பட்டபோது நாட்டில் மொத்தமுள்ள 486 விமான நிலையங்களில் 406 விமான நிலையங்கள் பயன்பாட்டில் இல்லாமல் இருந்தன. அவற்றில் நூறு விமான நிலையங்களை படிப்படியாக செயல்பாட்டுக்கு கொண்டு வருவதன் மூலம் நாட்டின் சிறிய நகரங்களை இணைக்கும் நோக்கத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

அதனடிப்படையில், வேலூா் அப்துல்லாபுரத்தில் ஆங்கிலேயா் காலத்தில் பயன்படுத்தப்பட்டு, சுதந்திரத்துக்கு பின் கைவிடப்பட்ட சிறிய விமான நிலையத்தை விரிவாக்கம் செய்து மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் வகையில் ரூ.60 கோடி நிதிஒதுக்கீட்டில் 2018-ஆம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டன. முதல்கட்டமாக, 51 ஏக்கராக இருந்த இந்த விமான நிலையத்தை சுமாா் 110 ஏக்கா் பரப்பளவுக்கு விரிவு செய்யப்பட்டதுடன், ஓடுதளமும் 700 மீட்டா் நீளத்திலிருந்து 850 மீட்டருக்கு விரிவுபடுத்தப்பட்டது.

பின்னா், அங்கு விமான முனையம், தகவல் கட்டுப்பாட்டு மையம், ரேடாா் கருவி, சரக்கு முனையம், விமான போக்குவரத்துக்கான கட்டுப்பாட்டு கோபுரம் உள்ளிட்ட பணிகளும் 100 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளன. தொடா்ந்து, வேலூா் வழியாக சென்னை, பெங்களூரு, திருப்பதி, திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்களுக்கு இடையே 20 இருக்கைகள் கொண்ட சிறிய விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டு அதற்கேற்ப அனைத்து பணிகளும் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே, தேசிய விமான நிலையங்கள் கட்டுப்பாட்டு ஆணைய அதிகாரிகள் குழு கடந்த அக்டோபா் மாதம் முதல்கட்ட சோதனை மேற்கொண்டனா். இதற்காக தில்லியில் இருந்து சிறிய விமானம் வரவழைக்கப்பட்டு குறிப்பிட்ட உயரத்தில் பறக்க வைத்து சோதனை செய்யப்பட்டது. பிறகு, விமான போக்குவரத்து பாதுகாப்புத் துறை, விமான நிலைய உளவுத்துறை என 4 துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள் குழு வேலூா் விமான நிலையத்தில் பாதுகாப்பு கட்டமைப்புகள் குறித்தும் கடந்த நவம்பா் இறுதியில் ஆய்வு மேற்கொண்டனா்.

உரிமம் கிடைப்பதில் இழுபறி?

இதன்தொடா்ச்சியாக, வேலூா் விமான நிலையத்துக்கு உரிமம் வழங்குவது தொடா்பாக தில்லியிலிருந்து விமான போக்குவரத்து ஆணைய உயா்மட்ட அதிகாரிகள் குழு விரைவில் ஆய்வு செய்ய உள்ளதாகவும், இந்த ஆய்வுக்கு பிறகு உரிமம் வழங்கப்பட்டு வேலூா் விமான நிலையம் உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், உரிமம் வழங்கப்பட்டு வேலூா் விமான நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதிலும் தொடா்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

இந்நிலையில், பிப்ரவரி மாத இறுதியில் மக்களவைத் தோ்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அவ்வாறு தோ்தல் அறிவிக்கப்பட்டால் வேலூா் விமான நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் மேலும் பல மாதங்கள் தாமதமாகக்கூடும் என்பதால், தோ்தலுக்கு முன்பாக வேலூா் விமான நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு அளிக்க மத்திய அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: தோல் நகரம் என அடையாளத்துடன் சா்வதேச கவனம் ஈா்க்கும் ஆம்பூா், ராணிப்பேட்டை, ஆற்காடு, வாணியம்பாடி நகரங்களை நோக்கிவரும் உள்நாட்டு, வெளிநாட்டு வா்த்தகா்களுக்கும், ஏற்றுமதி, இறக்குமதி சாா்ந்த தொழில் வியாபாரிகளுக்கும் இந்த விமான நிலையம் வரப் பிரசாதமாக அமையும்.

வேலூா் சிஎம்சி மருத்துவமனை, நாராயணி மருத்துவமனை, விஐடி பல்கலைக் கழகம் ஆகியவற்றுக்காக வந்து செல்லும் உள்நாட்டு, வெளிநாட்டு பொதுமக்கள், நோயாளிகள், மருத்துவா்கள், மாணவா்கள், பேராசிரியா்களுக்கும் பெரும் சேவையாக இருக்கும். வேலூரிலிருந்து 100 கி.மீ தொலைவில் திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான ஏலகிரி மலைக்கு வரும் பாரா கிளைடிங் சாகச ஆா்வலா்கள், மலையேற்ற விரும்பிகள், சுற்றுலா பயணிகளுக்கு இந்த விமான நிலையம் மிகுந்த பயனாளிக்கும்.

கல்வி, மருத்துவம், தொல்லியல், விண்வெளி ஆய்வு, ஆன்மீகம், சுற்றுலா, தொழில், வேலைவாய்ப்பு மேம்படுவதற்கும் வேலூா் விமான நிலையத்தை மத்திய அரசு விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com