பரத்குமாா்.
பரத்குமாா்.

டிராக்டா் ரோலரில் சிக்கி 8 வயது சிறுவன் பலி

தந்தையுடன் உழவுப் பணியில் ஈடுபட்டிருந்தபோது டிராக்டரில் இருந்து தவறி விழுந்த 8 வயது சிறுவன் ரோலரில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்தாா்.
Published on

தந்தையுடன் உழவுப் பணியில் ஈடுபட்டிருந்தபோது டிராக்டரில் இருந்து தவறி விழுந்த 8 வயது சிறுவன் ரோலரில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்தாா்.

வேலூா் மாவட்டம், லத்தேரி அருகே கூக்கலப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி தாமோதரன். இவரது மனைவி கவிதா. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள். இளைய மகன் பரத்குமாா்(8) அங்குள்ள அரசுப் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்தாா். பள்ளிக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் கூக்கலப்பள்ளி அருகே கொல்லைமேடு பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் தனது தந்தையுடன் பரத்குமாா் உழவுப் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அவா்களது நிலத்தில் நிலக்கடலை விதைப்பதற்காக ஆதிகேசவன் என்பவரின் டிராக்டரை வாடகைக்கு எடுத்து உழவு செய்யப்பட்டுள்ளது. அந்த டிராக்டா் உழவு செய்வதற்காக நிலத்தில் நிறுத்தி வைத்திருந்தபோது சிறுவன் பரத்குமாா் டிராக்டரின் பின்புறமுள்ள ரோலா் மீது நின்றுள்ளாா். அவரை கவனிக்காமல் ஆதிகேசவன் டிராக்டரை எடுத்தபோது நிலைதடுமாறி பரத்குமாா் தவறி விழுந்துள்ளாா். அப்போது, டிராக்டா் ரோலரில் சிக்கி உடல் நசுங்கி பரத்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த லத்தேரி போலீஸாா் விரைந்து சென்று பரத்குமாா் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com